ஈப்போ, ஜன. 4 - நேற்று அதிகாலை ஜாலான் ராயா தீமோர் பாராட் (ஜே.ஆர்.டி.பி.) கிரீக்-ஜெலியில் டெலிகாம் மலேசியா நிறுவனத்திற்குச் சொந்தமான மின் கேபிள்களைத் திருடிய சந்தேகத்தின் பேரில் இரண்டு உள்ளூர் ஆடவர்கள் கைது
செய்யப்பட்டனர்.
குற்றத் தடுப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பெர்சியா காவல் நிலைய உறுப்பினர்கள் 19 மற்றும் 23 வயதுடைய அவ்விரு சந்தேக நபர்களையும் வெவ்வேறு இடங்களில் கைது செய்ததாக கிரீக் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஜூல்கிப்ளி மாமுட் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு 12.45 மணியளவில் சந்தேகத்திற்கிடமான நிலையில் காணப்பட்ட பெரோடுவா அருஸ் ரகக் காரை நிறுத்திய குற்றத் தடுப்பு ரோந்துப் பிரிவினர் 23 வயது இளைஞரைக் கைது செய்தனர் அவர் கூறினார்.
அவ்வாடவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் எரிக்கப்பட்ட செப்புக் கம்பிகள் அடங்கிய மூட்டைகள் மற்றும் சில கேபிள் வெட்டும் உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்று அவர் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார்.
அவ்வாடவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் தொடர்ச்சியாக அன்றைய தினம் அதிகாலை 2.00 மணியளவில் கம்போங் பண்டாரியாங் சாலையோரத்தில் 19 வயதுடைய மற்றொரு சந்தேக நபரை தாங்கள் கைது செய்ததாக ஜூல்கிப்ளி கூறினார்.
குற்றவியல் சட்டத்தின் 431 ஏ பிரிவின் கீழ் விசாரணைக்காக அந்த இரண்டு சந்தேக நபர்களும் நேற்று தொடங்கி நான்கு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.


