கோலாலம்பூர், டிச. 4 - திருட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட
தனது சகாவை விடுவிப்பதற்கு காவல் துறை அதிகாரிக்கு 4,000 வெள்ளி
வரை லஞ்சம் கொடுக் க முயன்ற சந்தேகத்தின் பேரில் அந்நிய பிரஜை
ஒருவரை ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்.பி.ஆர்.எம்.) கைது செய்துள்ளது.
வாக்கு மூலம் வழங்குவதற்காக ஊழல் தடுப்பு ஆணையத்தின் கோல
சிலாங்கூர் கிளை அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் வந்த போது 30
வயது மதிக்கத்தக்க அந்த வங்காளதேச ஆடவர் கைது செய்யப்பட்டார்.
கிள்ளான் பள்ளத்தாக்கில் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வரும்
அந்த சந்தேகப் பேர்வழி கடந்த புதன் கிழமை கோல சிலாங்கூர் போலீஸ்
நிலையத்தின் அலுவலக அறை ஒன்றில் அதிகாரி ஒருவருக்கு லஞ்சம்
கொடுக்க முயன்றதன் மூலம் இக்குற்றத்தைப் புரிந்ததாக வட்டாரங்கள்
கூறின.
கோல சிலாங்கூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் எஸ்.பி.ஆர்.எம். செய்த
மனுவை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட் சித்தி ஹஜார் அலி சந்கேகப்
பேர்வழியை விசாரணைக்காக வரும் ஜனவரி 9ஆம் தேதி வரை ஏழு
நாட்களுக்குத் தடுத்து வைப்பதற்கு அனுமதி வழங்கினார்.
இதனிடையே, இந்த கைது நடவடிக்கையை பெர்னாமாவிடம்
உறுதிப்படுத்திய சிலாங்கூர் மாநில எஸ்.பி.ஆர்.எம். இயக்குநர் டத்தோ
அலியாஸ் சலிம், கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக 2009ஆம் ஆண்டு
எஸ்.பி.ஆர்.எம். சட்டத்தின் 17(பி) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.


