கோலாலம்பூர், டிச. 4 - அண்மையில் தலைநகர், டேசா ஸ்தாப்பாக்கில்
உள்ள பேரங்காடியின் முன்புறம் கிறிஸ்துவ சமயம் தொடர்பான
பிரசுரங்களை விநியோகம் செய்ததாகக் கூறப்படும் புகார் தொடர்பில் இரு
உள்நாட்டினர் உள்பட மூவரிடம் காவல் துறையினர் வாக்குமூலம் பதிவு
செய்துள்ளனர்.
முப்பது வயது மதிக்கத்தக்க இரு வெளிநாட்டினர் மற்றும் புகார்தாரர்
உள்ளிட்ட அம்மூவரிடமும் நேற்று முன்தினம் வாக்குமூலம் பதிவு
செய்யப்பட்டதாக கோலாலம்பூர் துணைப் போலீஸ் தலைவர் டத்தோ
அஸ்ரி அக்மார் ஆயோப் கூறினார்.
சுற்றுலா நோக்கத்திற்காக மலேசியா வந்த அந்த வெளிநாட்டினர்
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பிருந்து நாட்டில் தங்கியுள்ளனர் என்று
மாநில போலீஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்
கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
பொது இடத்தில் சமயப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்படுவதைச்
சித்தரிக்கும் காணொளி தொடர்பில் கடந்த திங்கள் கிழமை இரவு 10.19
மணியளவில தாங்கள் புகாரைப் பெற்றதாக வங்சா மாஜூ மாவட்ட
போலீஸ் தலைவர் ஏசிபி முகமது லாஸிம் இஸ்மாயில் முன்னதாக
கூறியிருந்தார்.
இதனிடையே. தலைநகர் பங்சார், ஜாலான் லிமாவில் கடந்த அக்டோபர்
7ஆம் தேதி நிகழ்ந்த வழிப்பறிச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாது ஒருவர்
கடந்த டிசம்பர் 30ஆம் தேதி மரணமடைந்தத்தற்கு நிமோனியா காரணம்
என கண்டறியப்பட்டுள்ளதாக டத்தோ அஸ்ரி தெரிவித்தார்.
இந்த மூதாட்டியின் மரணத்திற்கு வழிப்பறிச் சம்பவத்தின் போது ஏற்பட்ட
கடுமையான காயங்கள் காரணமல்ல. இதன் தொடர்பில் போலீசார்
மருத்துவர் மற்றும் பராமரிப்பு மையப் பிரதிநிதியிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு மேல் நடவடிக்கைக்காக சட்டத் துறைத் தலைவர் அலுவலகத்தின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.


