அலோர் ஸ்டார், டிச. 4 - லங்காவி, பந்தாய் தெலுக் யூ பகுதியில் நேற்று
முன்தினம் அதிகாலை தரையிறங்கிய 196 ரோஹிங்கியாக்களை காவல்
துறையினர் கைது செய்தனர்.
அந்நிய நாட்டினரை உள்ளடக்கிய கும்பல் ஒன்று கடற்கரையில்
தரையிறங்குவது தொடர்பில் பொது மக்களிடமிருந்து நேற்று
விடியற்காலை 3.25 மணியளவில் தாங்கள் புகாரைப் பெற்றதாக லங்காவி
மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷரிமான அஸ்ஹாரி கூறினார்.
உடனே சம்பவ இடத்திற்கு ரோந்துக் காரில் விரைந்த போலீசார் பெரும்
எண்ணிக்கையிலான அந்நிய நாட்டினர் அங்கு குழுமியிருப்பதையும்
கடற்கரையில் படகொன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதையும் கண்டனர்
என்று அவர் சொன்னார்.
இதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்வதற்காக 31 அதிகாரிகள்
மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய போலீஸ் குழு ஒன்று சம்பவ இடத்திற்கு
விரைந்தது. அந்த கும்பலில் 68 ஆண்கள், 57 பெண்கள் மற்றும் 32
சிறார்கள் இருந்தனர் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
ரோஹிங்கியா சிறுபான்மை இனத்தினரான அவர்கள் அனைவரும் பத்து நாட்களுக்கு முன் மியன்மாரிலிருந்து படகில் புறப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
அவர்கள் அனைவரும் லங்காவி குடிநுழைவுத் துறையினரிடம்
ஒப்படைக்கப்பட்டதாகக் கூறிய அவர், ஆவணப்படுத்தும் பணிக்காக
அவர்கள் லங்காவியில் உள்ள உள்துறை அமைச்சின் கட்டிடத் தொகுதிக்கு
கொண்டுச் செல்லப்பட்டனர் என்றார்.
மியன்மாரிலிருந்து வரும் எஞ்சிய படகுகளை கண்டுபிடிப்பதற்காக கடல்
போலீசார் தெலுக் யூ பகுதியில் தீவிர ரோந்துப பணியை மேற்கொண்டு
வருகின்றனர் என்று அவர் மேலும் சொன்னார்.


