கோத்தா கினபாலு, டிச. 4 - சட்டவிரோதமான முறையில் மின் இணைப்பை
ஏற்படுத்த முயன்றதாக சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவர் மின்சாரம்
தாக்கி உயிரிழந்தார். இச்சம்பவம் லோரோங் கோல் நியோட்ரோன்
கம்போங் லிக்காசில் நேற்று நிகழ்ந்தது.
இச்சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் இரவு 10.45 மணியளவில்
தாங்கள் தகவலைப் பெற்றதாக சபா மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத்
துறையின் நடவடிக்கை மையம் அறிக்கை ஒன்றில் கூறியது.
இதனைத் தொடர்ந்து லிந்தாஸ் தீயணைப்பு நிலையத்திலிருந்து பத்து பேர்
கொண்ட மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக தீயணைப்புத்
துறை குறிப்பிட்டது.
பாதிக்கப்பட்ட அந்த ஆடவர் நண்டு பிடிப்பதற்காக தனியாக .சதுப்பு நிலப்
பகுதிக்குச் சென்றுள்ளார். அந்த இடத்தில் அவர் மின்சாரத் தாக்குதலுக்கு
இலக்காகியுள்ளார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சபா மின்சார வாரியத்தின் பணியாளர்கள் வந்து சம்பவ இடத்தில் மின்
விநியோகத்தை துண்டித்தப் பின்னரே தீயணைப்பு வீரர்கள் அந்த ஆடவரை
அங்கிருந்து மீட்க முடிந்தது.
சம்பந்தப்பட்ட ஆடவர் உயிரிழந்து விட்டதை சம்பவ இடத்திலிருந்த
மருத்துவக் குழுவினர் உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து அவரது உடல்
மேல் நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.


