கோத்தா பாரு, ஜன. 3: சமீபத்தில் கிளந்தான் மாநிலத்தில் துப்புரவுப் பணியினை மேற்கொண்ட ஏஹ்சான் மடாணி குழு 100 டன்களுக்கும் அதிகமான வெள்ளக் கழிவுகளை அகற்றியதாக டத்தோ மந்திரி புசார் கூறினார்.
பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களின் வீடுகளைத் தவிர, பாதிக்கப்பட்ட பொது உள்கட்டமைப்பை சுத்தம் செய்வதிலும் ஏஹ்சான் மடாணி குழு ஈடுபட்டுள்ளதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
"100 டன்களுக்கும் அதிகமான குப்பைகளை சேகரிக்க முடிந்தது. 2021 ஆம் ஆண்டில் சிலாங்கூரில் ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் கிளந்தான் மக்களின் பிரச்சனையை தீர்க்க நாங்கள் உதவுவோம். வெள்ளத்தால் மக்கள் மனநலம் பாதிக்கப்படாமல் இருக்க அவர்களுக்கு உதவுவது முக்கியம்," என்று அமிருடின் கூறினார்.
கிளந்தான் மந்திரி புசார் டத்தோ முகமட் நசுருடின் தாவூத்திடம் வெள்ள நிவாரண காசோலையை ஒப்படைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
டேங்கர்கள், ரோரோ லாரிகள் உள்ளிட்ட 45 இயந்திரங்கள் மூலம் மூன்று நாட்கள் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டதாக அவர் விளக்கினார். இந்த நடவடிக்கையில் மாநில கழிவு சேகரிப்பு நிறுவனமான KDEB கழிவு மேலாண்மை நிறுவனமும் இணைந்தது
முன்னதாக, கெடா, திரங்கானு மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சிலாங்கூர் அரசும் உதவிக் குழுக்களை அனுப்பியது.


