சிரம்பான், ஜன. 3 - இல்லாத முதலீட்டுத் திட்டத்தின் மூலம் இரு நபர்களுக்கு 16 லட்சம் வெள்ளிக்கும் மேல் இழப்பை ஏற்படுத்தியதாக பாலர் பள்ளி உதவியாளர் மீது இங்குள்ள
இரண்டு மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
எனினும், தமக்கெதிராக கொண்டுவரப்பட்டக் குற்றச்சாட்டுகளை ரோஸ்மா யூனுஸ் (வயது 56) என்ற அந்த மாது மறுத்து விசாரணை கோரினார்.
இன்னும் தலைமறைவாக உள்ள மற்றொரு நபருடன் சேர்ந்து 57 வயதுடைய நபரை இல்லாத முதலீட்டுத் திட்டத்தில் ஏமாற்றி 15 லட்சத்து 45 ஆயிரத்து 824 வெள்ளியை தனக்குச் சொந்தமான சொந்தமான மூன்று வங்கிக் கணக்குகளில் செலுத்திக் கொண்டதாக மாஜிஸ்திரேட் நூருல் சகினா ரோஸ்லி முன் ரோஸ்மா மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கும் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதிக்கும் இடையில் கம்போங் டோக் டாகாங்கில் இந்தக் குற்றத்தைப் புரிந்ததாக அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
அதே சமயம், 2017 மற்றும் 2022 ஜூலை மாதத்திற்கும் இடையே
அதே நோக்கத்திற்காக 59 வயதான பெண்மணியை ஏமாற்றி பாரோய், தாமான் பஞ்சோர் ஜெயாவில் உள்ள தனது இரண்டு வங்கிக் கணக்குகள் மூலம் 97,800 வெள்ளியைப் பெற்றுக் கொண்டதாக மாஜிஸ்திரேட் சைட் ஃபாரிட் சைட் அலி முன்னிலையில் அவர் குற்றம் சாட்டப்பட்டார்
இவ்விரு குற்றச்சாட்டுகளும் குற்றவியல் சட்டத்தின் 420வது பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த வழக்கின் மறு விசாரணையை இரு நீதிமன்றங்களும் பிப்ரவரி 4ஆம் தேதிக்கு நிர்ணயித்தன.


