புத்ராஜெயா, ஜன. 3 - மலேசியா தனது வெளியுறவுக் கொள்கைகளை நிலைநிறுத்துவதில் குறிப்பாக, திறந்த பொருளாதாரம், அமைதி மற்றும் நடுநிலையைப் பேணுவதில் திடமாக உள்ள வேளையில் அநீதி, ஆக்கிரமிப்பு அல்லது இறையாண்மை மீறல் ஆகியவற்றை நிராகரிப்பதிலும் உறுதியுடன் உள்ளது என்று வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான் கூறினார்.
இந்த மதிப்புக் கூறுகளை நிலைநிறுத்தும் அதேவேளையில் கண்ணியத்துடனும் நம்பகத்தன்மையுடனும் மலேசியாவை பிரதிநிதித்துவப்படுத்துமாறு அதன் ஊழியர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.
இன்று வெளியுறவு அமைச்சின் (விஸ்மா புத்ரா) மாதாந்திர ஒன்று கூடும் நிகழ்வில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு சொன்னார்.
உலகளாவிய அரங்கில் மலேசியாவின் தோற்றத்தை உயர்த்துவதே எங்களின் இலக்காகும் எனக் கூறிய முகமது, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தூதரகப் பணிகளில் உள்ள விஸ்மா புத்ரா ஊழியர்கள் சிறந்து விளங்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்தார்.
விஸ்மா புத்ரா மற்றும் வெளிநாடுகளிலுள்ள மலேசியாவின் தூதரகங்களில் பணி புரியும் ஊழியர்கள் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் சமூக எதிர்பார்ப்புகள் உள்ளிட்ட விரைவான மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
தொழில்நுட்பம், காலம் மற்றும் எதிர்பார்ப்புகள் மாறி வருகின்றன. எனவே, மாற்றங்களுடன் நாம் தொடர்புடையவர்களாக இருப்பதற்கு நாம் நமது தரத்தை உயர்த்த வேண்டும் என்று முகமது தெரிவித்தார்.
உலகம் நமக்காகக் காத்திருக்காது. காலத்துடன் நாம் முன்னேற வேண்டும். வெற்றியை உறுதி செய்வதற்காக நம்பிக்கை, நேர்மை, அர்ப்பணிப்புடன் செயல்படுவோம் என்றார் அவர்.


