ஷா ஆலம், டிச.3- கூட்டரசு பிரதேசத்தில் புரியப்பட்ட எந்த குற்றத்திற்கும்
மன்னிப்பு வழங்கும், தண்டனையை ஒத்தி வைக்கும் மற்றும் குறைக்கும்
அதிகாரம் மாமன்னருக்கு உண்டு.
கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் 42(1) மற்றும் (2) விதிகள் இந்த
அதிகாரத்தை மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிமிற்கு
வழங்குவதாக இஸ்தானா நெகாரா இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில்
கூறப்பட்டுள்ளது.
அதே சமயம் குற்றத்திற்காக நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து
செய்யும் மற்றும் இடை நிறுத்தம் செய்யும் அதிகாரத்தையும் அவர்
கொண்டுள்ளார் என அவ்வறிக்கை தெரிவித்தது.
மாமன்னர் தலைமையேற்கும் கூட்டரசு பிரதேச மன்னிப்பு வாரியத்தின்
ஆலோசனைக்கு ஏற்ப இந்த அதிகாரத்தை அவர் பயன்படுத்த முடியும்.
ஆகவே, குற்றவாளியை மன்னிக்க அல்லது தண்டனையைக் குறைக்க
பரிந்துரைக்க விரும்பும் தரப்பினர் அடுத்தக் கூட்டத்தில் மன்னிப்பு வாரியம்
பரிசீலிப்பதற்கு ஏதுவாக அந்த பரிந்துரையை அந்த வாரியத்திடம்
முன்வைக்கலாம் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து
நடக்கும்படி மதித்து நடக்கும்படி அனைத்து தரப்பினரையும் இஸ்தானா
நெகாரா கேட்டுக் கொண்டது.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு ஆதரவைப்
புலப்படுத்தும் பேரணி வரும் திங்கள்கிழமை புத்ராஜெயாவிலுள்ள
நீதித்துறை மாளிகை முன் நடைபெறவுள்ள நிலையில் அரண்மனை இந்த
அறிக்கையை வெளியிட்டுள்ளது.
மாமன்னரின் பின் இணைப்பு உத்தரவு தொடர்பான உயர் நீதிமன்றத்தின்
தீர்ப்பை எதிர்த்து நஜிப் செய்து கொண்ட மனு மீது மேல் முறையீட்டு
நீதிமன்றம் எதிர்வரும் ஜனவரி 6ஆம் தேதி விசாரணை நடத்தவுள்ளது.


