ஷா ஆலம், டிச. 3 - விவசாயம் தொடர்பான உதவிகளை விரைந்து
பெறுவதற்கு ஏதுவாக மாநில அரசு உருவாக்கியுள்ள அக்ரோ சிலாங்கூர்
செயலியில் விரைந்து பதிவு செய்து கொள்ளும்படி மாநிலத்தில் உள்ள
விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலி, விவசாயிகளின்
விண்ணப்ப நடைமுறைகளை எளிதாக்குவதோடு புகார்களை
முன்வைப்பதற்குரிய வாய்ப்பினையும் ஏற்படுத்துகிறது என்று விவசாயத்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இஷாம் ஹஷிம் கூறினார்.
இந்த செயலி பலதரப்பட்ட, குறிப்பாக நவீன மற்றும் உயர் மதிப்பிலான
விவசாயம் தொடர்பான சமீபத்திய தகவல்களையும் உள்ளடக்கியுள்ளது.
உதவிகள் மற்றும் ஊக்குவிப்பு தொடர்பான தகவல்கள் இந்த செயலியில்
பகிரப்படும் அதேவேளையில் இதன் வாயிலாக ஆலோசகச் சேவையும்
வழங்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
விவசாயிகளுக்கு நாங்கள் உதவத் தயாராக இருக்கிறோம். ஒருங்கமைப்பு
பகிர்வு சேவையையும் இந்த செயலி வழங்குகிறது. விவசாயிகள்
பின்தங்கிவிடமாலிருப்பதற்கும் உதவிக்கான விண்ணப்பங்கள் எளிதில்
அங்கீரிக்கப்படுவதற்கும் இது அவசியமாகிறது என சிலாங்கூர்கினியிடம்
அவர் தெரிவித்தார்.
மாநிலத்திலுள்ள சுமார் 25,000 விவசாயிகள் பயன் பெறுவதற்கு ஏதுவாக
பல்வேறு வசதிகளைக் கொண்ட இந்த செயலியை இஷாம் கடந்த டிசம்பர்
12ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
தொடக்கக் கட்டமாக இந்த செயலியை குகூள் பிளே அல்லது
www.agroselangor.com என்ற அகப்பக்கம் வாயிலாகப் பதிவிறக்கம் செய்து
பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
மாநிலத்தில் விவசாயத்தை மேம்படுத்துவதற்கும் உள்ளுர் உற்பத்தியை
பிரபலப்படுத்துவதற்கும் ஏதுவாக நவீன மற்றும் உயர் மதிப்பிலான
விவசாயம் மீது மாநில அரசு கவனம் செலுத்தும் என்று மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முன்னதாகக் கூறியிருந்தார்.


