கோலாலம்பூர், ஜன 3: 2025 ஆம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட ஒப் சாப்பு சிறப்பு சோதனை நடவடிக்கையில் ஶ்ரீ கெம்பாங்கானில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் 80 சட்டவிரோத குடியேறிகளை சிலாங்கூர் மலேசிய குடிவரவுத் துறை
நேற்று தடுப்பு காவலில் வைத்தது.
20 முதல் 50 வயதுக்குட்பட்ட அந்த ஆண்கள் அனைவரும் வங்களாதேச, மியான்மர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, ஏமன், இந்தியா, இந்தோனேசியா மற்றும் நைஜீரியாவின் குடிமக்கள் என்று சிலாங்கூர் குடிநுழைவுத்துறை இயக்குநர் கைர்ருல் அமினஸ் கமருடின் கூறினார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் குடிநுழைவுத்துறை சட்டம் 1959/63 மற்றும் குடிநுழைவு விதிமுறைகள் 1963 ஆகியவற்றை மீறியதாக சந்தேகிக்கப்படுவதாகவும், அவர்கள் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இல்லாதவர்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு மேல் தங்கியிருந்ததாகவும் அவர் கூறினார்.
"மாலை 6 மணிக்கு தொடங்கிய இந்த நடவடிக்கையில் மொத்தம் 180 வெளிநாட்டினர் சோதனை செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டனர். அனைவரும் சுகாதார பரிசோதனை மற்றும் ஆவணப்படுத்தல் நோக்கங்களுக்காக அமலாக்க அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
“வெளிநாட்டவர்கள் அப்பகுதியில் அதிகளவில் வருவதைப் பற்றி பொதுமக்கள் புகார் செய்ததை தொடர்ந்து, மூன்று மாத உளவு நடவடிக்கைக்கு பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்நடவடிக்கையில் சிலாங்கூர் மலேசிய குடிவரவுத் துறை அமலாக்கப் பிரிவுத் தலைவர் ஜோஹாரி சுபர்டி தலைமையில் 22 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் ஈடுபட்டதாக கைர்ருல் அமினஸ் கூறினார்.
– பெர்னாமா


