புத்ராஜெயா, டிச. 3 - பரம ஏழ்மை மற்றும் வெள்ளத் தடுப்பு உள்ளிட்ட
முக்கியப் பிரச்சனைகளுக்கு விரைந்து தீர்வு காணப்பட வேண்டும் என்று
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
இப்பிரச்சனைகள் பொது மக்களின் உயிர் மற்றும் சொத்துகளுக்கு நேரடிப்
பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது என்று நிதியமைச்சருமான அவர்
சொன்னார்.
அணுகுமுறையை முழுமையாக மறுசீரமைக்க வேண்டும் என்பதை நான்
ஒப்புக் கொள்கிறேன். காரணம், வெள்ளம் மக்களின் சொத்துக்கள் மற்றும்
உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. இதர செலவினங்களுக்கான
தொகையை சேமிக்க வேண்டுமானால் அதனைச் செய்வோம். கடன் பெற
வேண்டிய அவசியம் ஏற்பட்டாலும் கடன் பெறுவோம் என்றார் அவர்.
மிக வறிய நிலையை ஒழிப்பது மற்றும் வெள்ளத் தடுப்பு போன்ற மிக
முக்கிய வேண்டிய முன்னெடுப்புகள் விரைவுபடுத்தப்பட வேண்டும். ஐந்து
அல்லது ஆறு ஆண்டு கால கணிப்பை பின்பற்றிக் கொண்டிருக்கக் கூடாது.
இப்பிரச்சனைகளுக்கு கூடுமானவரை விரைந்து தீர்வு காணப்பட வேண்டும்
என்று அவர் வலியுறுத்தினார்.
இன்று இங்கு நடைபெற்ற பிரதமர் துறையின் மாதாந்திர ஒன்று கூடும்
நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
அனைத்து அமைச்சுகளின் தலைமைச் செயலாளர்களும் முக்கிய
விஷயங்கள் மீது ஆய்வு நடத்துவதோடு மக்களின் பிரச்சனைகளைக்
கண்டறிவதற்காக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவர்கள் நேரில் வருகை
புரிய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
அவ்வாறு செய்யாவிட்டால், தலைமைச் செயலாளர்கள் வெறுமனே
வருகை புரிந்து, ரந்தாவ் பாஞ்சாங் முதல் கட்ட வெள்ளத் தடுப்புத் திட்டம்
முற்றுப்பெறும், இரண்டாம் கட்டம் 2026ஆம் ஆண்டிலும் மூன்றாம் கட்டம் 2019ஆம் ஆண்டிலும் முற்றுப் பெறும் என்று கருத்து கூறிவிடுவார்கள்.
திட்டம் நிறைவு பெறுவதற்கு மக்கள் 15 ஆண்டுகள் வரை காத்திருக்க
வேண்டுமா? மாநிலத்தின் ஆற்றல் குறித்து விவாதிக்க வேண்டியத்
தேவையில்லை. இவற்றைக் கேட்கவும் நான் தயாராக இல்லை.
பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். அதுதான் எனக்கு வேண்டும்
என்று அவர் சொன்னார்.


