கோலாலம்பூர், ஜன. 3 – மடாணி அரசின் அமைச்சரவையின் மூன்றாவது கலந்துரையாடல் (ரிட்ரிட்) நிகழ்வு விரைவில் நடைபெறும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இந்த நிகழ்வு இதுவரை அடைந்துள்ள வெற்றிகள் மீது கவனம் செலுத்துவதோடு மட்டுமல்லாமல் தங்கள் நிர்வாகத்தில் காணப்படும் பலவீனங்களை அமைச்சர்கள் நிவர்த்தி செய்வதற்கான வாய்ப்பாகவும் அமையும் என்று அவர் சொன்னார்.
அமைச்சரவைக்குள் தீவிரத்தன்மை அதிகரிக்கப்பட வேண்டும். மேலும் இந்த கலந்துரையாடல் அதற்கு அப்பாலும் நீட்டிக்கப்பட வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். அமைச்சுகளின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் தலைமை இயக்குநர்களும் இதனைப் பின்பற்ற வேண்டும் என்றார் அவர்.
இன்று இங்கு நடைபெற்ற பிரதமரின் துறையின் மாதாந்திர ஒன்று கூடும் நிகழ்வில் அவர் இதனைக் கூறினார். இந்த நிகழ்வில் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடி மற்றும் அரசின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அமைச்சரவையுடனான அன்வாரின் முதல் மற்றும் இரண்டாவது கலந்துரையாடல் அமர்வுகள் முறையே 2023 மற்றும் 2024 ஜனவரியில் நடைபெற்றன.


