கோலாலம்பூர், ஜன. 3 - கிளந்தான் மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களில் இன்று காலை 8.00 மணி நிலவரப்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 63 பேர் தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
பாசீர் மாஸ் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 36 பேர் இன்னும் ரந்தாவ் பாஞ்சாங், குவால் டோக் டே தேசியப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று கிளந்தான் மாநில சமூக நலத் துறையின் தகவல் அகப்பக்கம் தெரிவித்தது. இந்த எண்ணிக்கை நேற்று முதல் மாற்றமின்றி காணப்படுகிறது.
இதற்கிடையே, ரந்தாவ் பாஞ்சாங் பகுதியில் உள்ள சுங்கை கோலோக் ஆற்றின் நீர்மட்டம் தற்போது 7.70 மீட்டராக உயர்ந்து எச்சரிக்கை அளவில் இருப்பதாக நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறையின் இணையத்தளம் கூறியது.
ஜோகூர் மாநிலத்திலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மாற்றமில்லை.
அங்கு பாதிக்கப்பட்ட 27 பேரும் கோத்தா திங்கியில் உள்ள கம்போங் பெர்பாட் பல்நோக்கு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைக் குழுத் தலைவர் டான்ஸ்ரீ அஸ்மி ரோஹானி கூறினார்
இன்று காலை அனைத்து 10 மாவட்டங்களிலும் வானிலை தெளிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.


