கோத்தா பாரு, ஜன. 3 - ஷா ஆலம் புதிய விளையாட்டரங்கின் கட்டுமானப் பணிகள் இவ்வாண்டின் முதல் காலாண்டில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
ஷா ஆலம் விளையாட்டுத் தொகுதி (கே.எஸ்.எஸ்.ஏ.) மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கும் இந்த அரங்க கட்டுமானம் வரும் 2027 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பூர்த்தியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இதனை வெறும் விளையாட்டு மையமாக மட்டுமல்லாமல், சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷா மற்றும் சிலாங்கூர் விளையாட்டு மன்றத்தின் ஆதரவின் கீழ் சிலாங்கூர் இளைஞர் சமூகத்தால் நிர்வகிக்கப்படும் இளைஞர் மையமாகவும் உருவாக்க வேண்டும் என்பது எங்களின் இலக்காகும்.
இந்த திட்டம் ஒரு புதிய விளையாட்டரங்கை உருவாக்குவது மட்டுமல்ல. மாறாக, சுற்றியுள்ள பகுதியை மறுகட்டமைப்பதும் ஆகும். அடிக்கடி வெள்ளம் ஏற்படும் காரணத்தால் ஆழமான அடித்தளப் பணிகளை இங்கு மேற்கொள்ள வேண்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்று இங்கு நடைபெற்ற மலேசிய கிளந்தான் பல்கலைக்கழக மாணவர்களுடனான கோப்பிதியாம் கித்தா கலந்துரையாடல் அமர்வின் போது அவர் இதனைக் கூறினார்.
இந்த விளையாட்டரங்கம் முழு குளிர் சாதன வசதி உட்பட மலேசியாவில் அதிநவீன விளையாட்டு வசதிகள் கொண்ட விளையாட்டரங்கமாகவும் விளங்கும் என்றும் அமிருடின் மேலும் தெரிவித்தார்.
இந்த அரங்கம் முழுமையாக குளிரூட்டப்பட்டதாகவும் அதிநவீன திடல் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டதாகவும் இருக்கும். இதனை விளையாட்டுத் திடலாகவும் நிகழ்ச்சிகளை நடத்தக்கூடிய மண்டபமாகவும் பயன்படுத்த முடியும் என்று அவர் கூறினார்.


