கோலாலம்பூர், ஜன. 2 - கடந்த மாதம் 31ஆம் தேதி சுபாங் ஜெயா, பண்டார் சன்வேயில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நால்வர் திடீர் மரணமடைந்தது தொடர்பான நச்சுயியல் சோதனை அறிக்கைக்காக அரச மலேசிய போலீஸ் படை இன்னும் காத்திருக்கிறது.
எனினும், பாதிக்கப்பட்ட அனைவரின் மரணங்களும் போதைப்பொருள் உட்கொண்டதால் ஏற்பட்டதற்கான சாத்தியத்தை சிலாங்கூர் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் நிராகரிக்கவில்லை.
இறந்த நான்கு பேர் உட்பட ஏழு பாதிக்கப்பட்டவர்களின் உடலில் காணப்படும் ஒரே மாதிரியான அறிகுறிகளின் அடிப்படையில் இவ்வாறு கணிக்கப்படுவதாக ஹூசேன் கூறினார்.
இதுவரை, மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையம் மற்றும் கோலாலம்பூர் மருத்துவமனைகளிடமிருந்து ஆறு போலீஸ் போலீஸ் புகார்கள் பெறப்பட்ட வேளையில் இரண்டு மருத்துவமனைகளிலும் ஒரே அறிகுறிகளைக் காட்டும் ஏழு நோயாளிகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டது தெரிய வருகிறது.
முன்னர் அறிவிக்கப்பட்டபடி, அவர்களில் நான்கு பேர் உயிரிழந்து விட்டனர். மேலும் இருவர் இன்னும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர், மற்றொருவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார் என்று அவர் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட அந்த ஏழு பேரும் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் தனித்தனியாக அந்த இசை நிகழ்ச்சிக்கு சென்றுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தில் குற்றவியல் கூறுகள் அல்லது நச்சுத்தன்மைக்கான அறிகுறிகளைக் அடையாளம் காண நான்கு திடீர் மரண விசாரணை அறிக்கைகளை காவல்துறை திறந்துள்ளது.
நேற்று முன்தினம் பண்டார் சன்வேயில் நடைபெற்ற புத்தாண்டு இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 20 முதல் 40 வயதுக்குட்பட்ட இரு ஆடவர்களும் இரு பெண்களும் உயிரிழந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


