கோலாலம்பூர், ஜன 3 - சவுதி அரேபியாவில் மலேசியர் ஒருவர் கைது செய்யப்பட்டதை வெளியுறவு அமைச்சு நேற்று உறுதி செய்துள்ளது.
சம்பந்தப்பட்ட நபருக்கு தூதரக உதவி வழங்கப்படும் அதே வேளையில் உள்நாட்டுச் சட்டம் மூலம் அவரது உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதிசெய்ய தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
நிலைமையைக் கையாள்வதற்கு அமைச்சு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அணுக்கமாகச் செயல்பட்டு வருகிறது. உரிய ஆதரவை வழங்க அது உறுதிபூண்டுள்ளதோடு வெளிநாட்டில் உள்ள அனைத்து மலேசியர்களுக்கும் இரகசியத்தன்மை மற்றும் கண்ணியம் ஆகியவற்றின் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கு பாடுபடுகிறது.
இந்த கடினமான நேரத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் தனியுரிமையை மதிக்குமாறு ஊடகங்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இதுபோன்ற விஷயங்கள் உணர்வுப்பூர்வமானவை என்பதால் ஊகங்கள் அல்லது வதந்திகளுக்கான வாய்ப்பாக கருதக்கூடாது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், போதைப்பொருள் வைத்திருந்ததற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் கைது செய்யப்பட்ட பிரபல நகைச்சுவை நடிகர் தற்போது அந்நாட்டில் ஆறு மாத சிறைத்தண்டனை அனுபவித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த நவம்பரில் நகைச்சுவை நடிகருக்கு எதிராக நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது இந்த தண்டனை வழங்கப்பட்டதாகவும் அந்த தீர்ப்பின் அடிப்படையில் இந்த தண்டனை ஏப்ரல் மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அததகவல்கள் தெரிவிக்கின்றன.
நகைச்சுவை நடிகர் சிறையில் நன்னடத்தையைக் கடைபிடித்தால் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்னதாகவே விடுவிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக, கஞ்சா வகை போதைப்பொருள் வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் மலேசியர் ஒருவர் ஜெட்டாவில் கைது செய்யப்பட்டதை ரியாத்தில் உள்ள மலேசிய தூதரகம் உறுதிப்படுத்தியது. ஆனால், அவரது அடையாளத்தை தூதரகம் வெளியிடவில்லை என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.


