ஷா ஆலம், டிச. 2- சிலாங்கூரில் எஸ்.பி.எம். தேர்வில் அமர்ந்துள்ள 73,899
மாணவர்களில் இருவர் சிறையிலிருந்து அந்த தேர்வை எழுதுவதாக
சிலாங்கூர் மாநில கல்வித் துறை கூறியது.
இன்று தொடங்கி எதிர்வரும் பிப்ரவரி 6ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும்
இத்தேர்வை மேலும் 25 மாணவர்கள் மருத்துவமனைகளிலிருந்து
எழுதுவதாக அத்துறையின் இயக்குநர் டாக்டர் ஜெப்ரி அபு கூறினார்.
இந்த தேர்வு சீராக நடைபெறுவதை உறுதி செய்வதில் 5,102 ஆசிரியர்கள்
மற்றும் 872 தன்னார்வலர்கள் உள்பட மொத்தம் 7,651 பணியாளர்கள்
ஈடுபட்டுள்ளனர் என்று அவர் கூறியதாக பெரித்தா ஹரியான் செய்தி
வெளியிட்டுள்ளது.
மாநிலத்திலுள் அனைத்து தேர்வு மையங்களும் வெள்ள அபாயத்திலிருந்து
விடுபட்டுள்ளதாகக் கூறிய அவர். எனினும், வெள்ளம் ஏற்படுதம்
சாத்தியத்தை எதிர்கொள்ள தாங்கள் தயாராக உள்ளதாகவும் அவர்
சொன்னார்.
தற்போதைக்கு சிலாங்கூரில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. எந்த
தேர்வு மையமும் வெள்ளத்தில் பாதிக்கப்படவில்லை என்பதோடு வெள்ள
அபாயம் உள்ள இடங்களிலும் அவை அமைந்திருக்கவில்லை என அவர்
மேலும் கூறினார்.
2024ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வை எழுத 400,000க்கும் மேற்பட்ட
மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்கள் நாடு முழுவதும் உள்ள 3,000
தேர்வு மையங்களில் இன்று தொடங்கி தேர்வை எழுதவிருக்கின்றனர்.


