ஷா ஆலம், ஜன 2: எதிர்வரும் பிப்ரவரி தொடங்கி தாமான் செந்தோசாவை நகர அந்தஸ்துக்கு மேம்படுத்தும் முன்மொழிவுக்கு கிள்ளான் மாநகராட்சி ஒப்புதல் அளித்துள்ளது.
பண்டார் பொட்டானிக், பண்டார் புக்கிட் திங்கி, பண்டார் புத்ரா மற்றும் பண்டார் புத்ரி ஆகிய இடங்களில் உள்ள வளர்ச்சி அடைந்த பகுதிகளை சமநிலைப்படுத்த இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது என செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி குணராஜ் கூறினார்.
"கிள்ளான் மாநகராட்சி உடன் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அதில் குறிப்பிட்ட முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது குறித்து எதிர்வரும் பிப்ரவரியில் நடைபெறும் விழா ஒன்றில் அறிவிக்கப்படும்," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
தாமான் செந்தோசாவில் உள்கட்டமைப்பு வசதிகள், குறிப்பாக குடியிருப்பு பகுதிகள் மற்றும் வழிபாட்டு தளங்கள் நகரின் நிலைக்கு ஏற்ப மேம்படுத்தப்படும் என குணராஜ் நம்புகிறார்.
"தாமான் செந்தோசா நகர நிலைக்கு மேம்படுத்துவது குடியிருப்பாளர்களுக்கு ஒரு நற்செய்தியாகும். அவர்களின் மனநிலையும் மாறும் என்று நம்புகிறேன்.
"இந்தப் பகுதியில் உள்ள முக்கியமான பிரச்சனை தூய்மை, எனவே, குப்பைகளை சரியான முறையில் அகற்றுவதன் மூலம் மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மேலும், குடியிருப்பு மற்றும் வழிபாட்டு தளங்களின் மேம்பாட்டு பணியை தீவிரப்படுத்துவது செந்தோசா தொகுதியின் தொலைநோக்கு சிந்தனை ஆகும்," என்று அவர் விளக்கினார்.


