சியோல், ஜன 2: தென் கொரியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 179 பேரை பலி கொண்ட நாட்டின் மிக மோசமான விமானப் பேரிடர் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக ஜெஜு ஏர் மற்றும் முவான் அனைத்துலக விமான நிலையத்தின் நடத்துநர் ஆகிய தரப்பிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தென் கொரிய போலீசார் இன்று தெரிவித்தனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து தென்மேற்கு தென் கொரியாவில் உள்ள முவான் விமான நிலையம் வந்த அந்த ஜெஜு ஏர் 7 சி 2216 விமானம் கியர் செயல்படாத நிலையில் ஓடுபாதையை உரசியபடி தரையிங்க முயன்றது.
எனினும் அந்த முயற்சியின் போது விமானம் கட்டுப்பாட்டை இழந்து விமான நிலையத்தின் ஓடுபாதையை தாண்டி தடுப்புச் சுவரை மோதி தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அந்த போயிங் 737-800 விமானத்தின் பின்புறம் அமர்ந்திருந்த இரண்டு விமானப் பணியாளர்கள் மட்டும் மீட்புப் படையினரால் உயிருடன் மீட்கப்பட்டனர்.
தென்மேற்கு நகரமான முவானில் உள்ள விமான நிலைய நடத்துநர் மற்றும் போக்குவரத்து அமைச்சின் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் அலுவலகங்களையும் சியோலில் உள்ள ஜெஜு ஏர் அலுவலகத்தையும் போலீஸ் புலனாய்வாளர்கள் ஆய்வு செய்து வருவதாக தெற்கு ஜியோல்லா மாநில காவல்துறை ஊடக அறிக்கையில் தெரிவித்தது.
விமானத்தின் செயல்பாடு, பராமரிப்பு மற்றும் விமான நிலைய வசதிகளின் செயல்பாடு தொடர்பான ஆவணங்கள் மற்றும் பொருட்களை விசாரணை அதிகாரிகள் கைப்பற்ற திட்டமிட்டுள்ளனர் என்று ஒரு போலீஸ் அதிகாரி ராய்ட்டர்ஸிடம் கூறினார்.
விமான நிறுவனம் நிலைமையை ஆராய்ந்து வருவதாக ஜெஜு ஏர் நிறுவனப் பேச்சாளர் கூறினார். எனினும், விமான நிலைய நடத்துநரிடம் இது குறித்து கருத்து பெற முடியவில்லை.


