ஹெமில்டன், ஜன. 2- தற்போது செயல்பட முடியாத அளவுக்கு
பாதிக்கப்பட்டிருக்கும் கமால் அத்வான் மருத்துவமனை உள்பட காஸாவில்
உள்ள மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இராணுவத்
தாக்குதல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) கண்டனம்
தெரிவித்துள்ளது.
மருத்துவமனைகள் உள்பட பொது மக்கள் மற்றும் பொது அடிப்படை
வசதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இந்த தாக்குதல்
நடவடிக்கையையும் கண்டிக்கும் எங்களின் நிலைப்பாட்டை மீண்டும்
வலியுறுத்த விரும்புகிறோம் என்று ஐ.நா.வின் பேச்சாளரான
புளோரேன்சியா சாத்தோ நினோ கூறினார்.
பொது மக்கள் மருத்துவ உதவியைப் பெறக்கூடிய மருத்துவமனைகள்
உள்ளிட்ட பாதுகாப்பான பகுதிகளுக்கு உரிய மரியாதை அளிக்கும்படி
நாங்கள் பல முறை வலியுறுத்தி வந்துள்ளோம் என்று அவர் இங்கு
நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் குறிப்பிட்டார்.
கமால் அத்வான் மருத்துவமனையின் இயக்குநரான டாக்டர் ஹூஸாம்
அபு சாஃபியா கைது செய்யப்பட்டது குறித்து வினவப்பட்ட போது, குற்றம்
ஏதும் புரியாத பொதுமக்கள் மற்றும் மக்களுக்கு உதவும் பணியில்
ஈடுபட்டுள்ளவர்கள் ஒருபோதும் கைது செய்யப்படக் கூடாது என அவர்
வலியுறுத்தினார்.
நாங்கள் நீண்ட காலமாக இது குறித்து விவாதித்து வருகிறோம்.
காஸாவில் பாதுகாப்பான இடம் ஒன்று எதுவும் இல்லை எனக் கூறிய
அவர், மருத்துவமனை இயக்குநர் உள்பட அனைத்துப் பொது மக்களின்
பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பாடுபடும் எந்த தரப்பினருடனும்
இணைந்து பணியாற்றத் தாங்கள் தயாராக உள்ளதாகச் சொன்னார்.
கமால் அத்வான் மருத்துவமனையிலிருந்து பத்து நோயாளிகள் இட
மாற்றம் செய்யப்பட்டதாகவும் எனினும், அப்பகுதியை விட்டு வெளியேறும் போது சோதனைச் சாவடியில் அவர்களை வழி மறித்த இஸ்ரேலிய இராணுவம் அவர்களில் நால்வரை கைது செய்தது என்றும் அவர் தெரிவித்தார்.


