வாஷிங்டன், ஜன. 2- நியூ ஆர்லியன்ஸ் பயங்கரவாத தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 15 பேராக உயர்ந்துள்ளதாக எஃப்.பி.ஐ. நேற்று அறிவித்தது.
இந்த தாக்குதலில் ஈடுபட்டவர் டெக்ஸாஸ் நகரைச் சேர்ந்த அமெரிக்க குடிமகன் என்பதை அந்த புலன் விசாரணை அமைப்பு உறுதிப்படுத்தியது.
போர்பன் தெருவில் புத்தாண்டைக் கொண்டாடிக் கொண்டிருந்த கூட்டத்தினரை வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட வாடகை டிரக்கினால் அந்த ஆடவர் மோதித் தள்ளியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட சந்தேக நபர் டெக்சாஸைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் 42 வயதான சம்சுட்-தின் ஜப்பார் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக எஃப்.பி.ஐ. அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதலுக்கு முன் ஜப்பார் பதிவிட்ட வீடியோ பதிவுகளை புலனாய்வாளர்கள் ஆய்வு செய்து வருவதாக அதிகாரிகள் மேலும் கூறினர்.
சம்பவத்தின் போது அவர் ஒரு ஃபோர்டு பிக்கப் டிரக்கை பயன்படுத்தியுள்ளார். அது வாடகைக்கு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும் அந்த வாகனம் எப்படி அவர் வசம் வந்தது என்பதை உறுதிப்படுத்த நாங்கள் விசாரித்து வருகிறோம் என்று அந்த அமைப்பு குறிப்பிட்டது.
அந்த டிரக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தோற்றத்திலான கொடி இருந்ததை எஃப்.பி.ஐ. உறுதிப்படுத்தியது.
இந்த விசாரணைக்கு எஃப்.பி.ஐ. தலைமை தாங்குகிறது. நேற்று பிற்பகல் நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது, பல சந்தேக நபர்களை உள்ளடக்கியப் பயங்கரவாத செயல் இது என்று அவ்வமைப்பு விவரித்தது.


