பாடாங் பெசார், ஜன. 2- மலேசிய-தாய்லாந்து எல்லையில்
கெசெலாமாத்தான் சாலையின் டி.எஸ்.13 சாவடி அருகே நேற்று
மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனை நடவடிக்கையில் சுமார் நான்கு
லட்சம் வெள்ளி மதிப்பிலான எட்டு கிலோ கஞ்சாவை பொது
நடவடிக்கைப் பிரிவினர் (பி.ஜி.ஏ.) கைப்பற்றினர்.
வாகனத்தில் உளவு நடவடிக்கையை மேற்கொண்ட பி.ஜி.ஏ. உறுப்பினர்கள்
பின்னிரவு 12.30 மணியளவில் தாய்லாந்து-மலேசியா எல்லை சுவரை
நோக்கி டார்ச் விளக்கின் ஒளி பாய்ச்சப்படுவதைக் கண்டதாக பி.ஜி.ஏ.
வடபிராந்திய படைப்பிரிவின் கமாண்டர் ஷஹரும் ஹஷிம் கூறினார்.
உடனே, சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்ட அவர்கள், சுவரின்
ஓரம் வைக்கப்பட்டிருந்த கருப்பு நிறப் பையைக் கண்டனர். அந்த பையைச்
சோதனையிட்டதில் அதில் ஒன்பது கஞ்சா பொட்டலங்களோடு சந்தேகப்
பேர்வழியின் உடைகளும் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது என்று அவர்
சொன்னார்.
பெர்லிஸ் மாநிலத்திலுள்ள சந்தையில் இந்த போதைப் பொருள்
விநியோகிக்கப்படவிருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது எனக் கூறிய அவர்,
இப்பகுதியில் போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வரும்
கும்பலை அடையாளம் காணும் முயற்சியில் தாங்கள் ஈடுபட்டு
வருவதாகச் சொன்னார்.
இந்த போதைப் பொருள் பறிமுதல் தொடர்பில் 1952ஆம் ஆண்டுஅபாயகர
போதைப் பொருள் சட்டத்தின் 52பி பிரிவின் கீழ் விசாரணை
மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, பி.ஜி.ஏ. பெர்லிஸ் கைப்பற்றிய போதைப் பொருளின் மதிப்பு
2024ஆம் ஆண்டு குறைந்துள்ளதாகவும் ஷஹரோம் கூறினார். கடந்த
2023ஆம் ஆண்டு ஐந்து சம்பவங்களில் 15 லட்சத்து 4 ஆயிரத்து 460 வெள்ளி மதிப்புள்ள போதைப் பொருள் கைப்பற்றப்பட்ட வேளையில் கடந்தாண்டு நான்கு சம்பவங்களில் 455,900 வெள்ளி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது என்றார்.


