ஷா ஆலம், ஜன. 2- சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் 2025 இயக்கத்தை
(டி.எம்.எஸ்.2025) முன்னிட்டு ஸ்ரீ கெம்பாங்கான் சுற்றுலா இயக்கத்தை
எதிர்வரும் பிப்ரவரி மாதம் தொடங்க ஸ்ரீ கெம்பாங்கான் சட்டமன்றத் தொகுதி
திட்டமிட்டுள்ளது.
இந்த இயக்கத்தை முன்னிட்டு தொகுதியிலுள்ள பல்வேறு சுற்றுலா ஈர்ப்பு
இடங்களும் நிகழ்வுகளும் முன்னிலைப்படுத்தப்படும் என்று தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் வோங் சியு கீ கூறினார்.
ஸ்ரீ கெம்பாங்கான் தொகுதி பல கவர்ச்சிகரமான சுற்றுலா இடங்களைக்
கொண்டுள்ளது. ஸ்ரீ கெம்பாங்கான் அல்லது செர்டாங்கை சுற்றுலா ஈர்ப்பு
மையமாக வரும் பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்த நாங்கள்
திட்டமிட்டுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.
தொகுதியில் குறிப்பாக சுற்றுலா மையங்களில் அடிப்படை வசதிகளை
மேம்படுத்துவதில் தாங்கள் இவ்வாண்டு கவனம் செலுத்தவுள்ளதாக அவர்
மீடியா சிலாங்கூரிடம் குறிப்பிட்டார்.
சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் 2025 இயக்கத்தை முன்னிட்டு சுங்கை
குயோ மற்றும் கம்போங் பாரு ஸ்ரீ செம்பாங்கான் உள்ளிட்ட பகுதிகள் மீது
கவனம் செலுத்தப்படும் என்று அவர் மேலும் சொன்னார்.
மலேசியாவில் மிகப்பெரிய புதுக்கிராமமாக விளங்கும் கம்போங் பாரு ஸ்ரீ
கெம்பாங்கானில் அடிப்படை வசதிகள் மிகவும் மோசமான நிலையில்
உள்ளதோடு அதனை தரம் உயர்த்த வேண்டியுள்ளதாக அவர் கூறினார்.
இந்த பகுதி சுற்றுலா பயணிகளை ஈர்க்கக் கூடிய இடமாக உள்ளதால்
அங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த
வேண்டியுள்ளது.
நாங்கள் தற்போது சுங்கை குயோ மற்றும் ஸ்ரீ கெம்பாங்கானில்
நிலவடிவமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். ஆற்றைப்
பின்னணியாகக் கொண்ட இந்த இடம் சுற்றுலாப் பயணிகள் புகைப்படம்
எடுத்துக் கொள்வதற்கு ஏற்ற இடமாக விளங்கும் என்றார் அவர்.


