கோலாலம்பூர், ஜன. 2- ஆபத்தான முறையிலும் விதிகளுக்கு புறம்பாகவும்
சைக்கிளோட்டிய குற்றத்திற்காக 21 பதின்ம வயதினருக்கு சம்பவ
இடத்திலேயே தோப்புக்கரணம் போட உத்தரவிடப்பட்டது.
2025 புத்தாண்டு தொடக்கத்தை முன்னிட்டு இங்குள்ள ஜாலான் சுல்தான்
அஸ்லான் ஷா சாலையில் மேற்கொள்ளப்பட்ட சாலைத் தடுப்புச்
சோதனையின் போது அந்த இளையோருக்கு இந்த நூதன தண்டனையை
காவல் துறையினர் வழங்கினர்.
பிரேக், எச்சரிக்கை மணி மற்றும் விளக்கு இல்லாத சைக்கிள்களை
அபாயகரமான முறையிலும் ஒருவரோடு ஒருவர் போட்டியிட்டுக்
கொண்டும் ஓட்டிய குற்றத்திற்காக 14 முதல் 17 வயது வரையிலான அந்த
21 இளையோரும் பிடிபட்டதாக கோலாலம்பூர் சாலை போக்குவரத்து
அமலாக்க மற்றும் விசாரணைப் பிரிவின் (ஜே.எஸ்.பி.டி.) தலைவர் ஏசிபி
முகம்து ஜம்சுரி முகமது ஈசா கூறினார்.
இக்குற்றத்திற்காக சம்பந்தப்பட்டவர்கள் மீது சாலை போக்குவரத்து
விதிமுறைகள் (விதி 42) எல்என் 165/59 இன் கீழ் நடவடிக்கை எடுக்க
முடியும் என்பதோடு 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின்
112வது பிரிவின் கீழ் அந்த சைக்கிள்களை பறிமுதல் செய்யவும் இயலும்
என்று அவர் தெரிவித்தார்.
இருப்பினும், குற்றவியல் நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்து
சம்பந்தப்பட்ட இளையோருக்கு எச்சரிக்கை விடுக்கும் அதேவேளையில்
படிப்பினையை வழங்கும் விதமாக அவர்களை தோப்புக்கரணம் போடும்
உத்தரவை சம்பவ இடத்திலிருந்த ஜே.எஸ்.பி.டி மற்றும் சாலை
போக்குவரத்து இலாகா அதிகாரிகள் இருவர் வழங்கினர் என அவர்
குறிப்பிட்டார்.
பின்னர் சாலை தடுப்புச் சோதனையை மேற்கொண்டிருந்த காவல் துறை
உறுப்பினர்களிடம் மன்னிப்பு கோரிய அவர்கள், சைக்கிளை ஓட்டிச்
செல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்
என்றார் அவர்.
சம்பந்தப்பட்ட இளையோர் தோப்புக்கரணம் போடுவதை சித்தரிக்கும்
காணொளி சமூக ஊடகங்களில் பரவிய நிலையில் காவல் துறையினரின்
இந்த விவேகமான அணுகுமுறையை நெட்டிசன்கள் பெரிதும் பாராட்டினர்.


