ஷா ஆலம், ஜன. 2- சுபாங் ஜெயா, பண்டார் சன்வேயில் நேற்று
முன்தினம் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற இரு ஆண்கள்
மற்றும் இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் திடீரென மரணமடைந்தது
தொடர்பில் புகார் கிடைக்கப் பெற்றுள்ளதை காவல் துறை
உறுதிப்படுத்தியுள்ளது.
உள்நாட்டினரான 20 முதல் 40 வயதுக்குட்பட்ட அந்த நால்வரின் மரணம்
தொடர்பில் பெட்டாலிங் ஜெயாவிலுள்ள மலாயா பல்கலைக்கழக
மருத்துவ மையம் போலீஸ் புகாரைச் செய்ததாக சிலாங்கூர் மாநில
போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் கூறினார்.
நேற்று சவப்பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில் ஆய்வக
விசாரணையின் அறிக்கைக்காக தாங்கள் காத்திருப்பதாக அவர் சொன்னார்.
அந்த நால்வரின் உடலில் வெளிப்புறக் காயங்கள் எதுவும்
காணப்படவில்லை எனக் கூறிய அவர், இந்த சம்பவம் திடீர் மரணம் என
வகைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
எனினும், இந்த மரணத்தில் விஷம் அல்லது குற்றவியல் கூறுகள்
சம்பந்தப்பட்டுள்ளதற்கான சாத்தியத்தைக் கண்டறிய தொடர்ந்து
விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என அவர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் தகவலறிந்தவர்கள் 03-56382122 என்ற
எண்களில் விசாரணை அதிகாரி சார்ஜன் முகமது ரிட்சால் அல்லது 03-
78627222 என்ற எண்களில் மாவட்ட கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்பு
கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.


