ஜோகூர் பாரு, ஜன 1 - கடந்த சனிக்கிழமை இங்குள்ள இஸ்கந்தர் புத்ரி, முத்தியாரா ரினியில் காரை நிறுத்தி சோதனை செய்த போலீசார், ஒரு காதல் ஜோடியைக் கைது செய்து 24 லட்சத்து 10 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப் பொருட்களை போலீஸார் கைப்பற்றினர்.
அந்த ஜோடி பயணித்த தோயோத்தா வியோஸ் காரில் போதைப்பொருள் இருப்பது அந்த சிறப்பு சோதனை நடவடிக்கையில் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து 33 வயது ஆணும் 31 வயது பெண்ணும் கைது செய்யப் பட்டதாக ஜோகூர் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.
கார் பின்புறம் பொருள் வைக்கும் பூத் பகுதியில் 24.1 வெள்ளி மதிப்புள்ள 14 கிலோவுக்கும் அதிகமான எக்ஸ்டசி, 24.58 கிராம் கெத்தமின், 2.75 கிராம் ஷாபு மற்றும் 19.48 கிராம் எக்ஸ்டசி போதை மாத்திரைகள் இருந்ததாக ஜோகூர் மாநில காவல் படைத் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
மேலும், இந்த சோதனையில் 15,573 வெள்ளி மதிப்புள்ள நகைகள் மற்றும் 2,170 தாய் பாட் (280 வெள்ளி) ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவ்விரு சந்தேக நபர்களும் போதைப் பொருளை உட்கொண்டிருந்தது அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் சோதனை கண்டறியப்பட்டது என்றார் அவர்
போதைப்பொருள் தொடர்பான முந்தைய குற்றப் பதிவுகளையும் அவர்கள் கொண்டுள்ளதாகக் கூறிய அவர், 1952ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் 39பி பிரிவின் கீழ் விசாரணைக்காக சனிக்கிழமை தொடங்கி ஏழு நாட்களுக்கு அவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்


