சிரம்பான், ஜன. 1- ஜெம்போல், ஜாலான் பஹாவ்-கெமாயான் சாலையின் 10வது கிலோமீட்டரில் இன்று காலை இரு மாணவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்தனர்.
அதிகாலை 3.20 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக 17 வயதுடை அவ்விரு மாணவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக ஜெம்போல் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் ஹூ சாங் ஹூக் தெரிவித்தார்.
இவ்விபத்து நிகழ்ந்த போது அம்மாணவர்கள் யமஹா ஒய்16இசட்ஆர் மற்றும் யமஹா லெஜெண்ட் மோட்டார் சைக்கிள்களைச் ஓட்டிக்கொண்டிருந்தனர். பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் பஹாவிலிருந்து கெமாயன் நோக்கிச் சென்றபோது இந்த சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது.
சம்பவ இடத்தில் மலையின் மீது ஏறிக்கொண்டிருந்த போது எதிர் திசையில் இருந்து வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளை மோதியதாக நம்பப்படுகிறது என்று அவர் இன்று இங்கு வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இவ்விபத்து தொடர்பில் 1987ஆம் ஆண்டுசாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 41(1)வது பிரிவின் விசாரணை நடத்தப்படுகிறது என்றும், சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் முகமது அமிருள் சயாபிக் முகமட் யூசோப் அல்லது ஜெம்போல் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் விசாரணை மற்றும் போக்குவரத்து அமலாக்கப் பிரிவை 016-2348 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.


