ஷா ஆலம், ஜன. 1- சிகிஞ்சானிலிருந்து தென்மேற்கே சுமார் 26 கடல் மைல் தொலைவில் அனுமதியின்றி நங்கூரமிட்ட சரக்குக் கப்பல் ஒன்றை மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனத்தின் (எம்.எம்.இ.ஏ.) அமலாக்க அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர்.
மலேசிய கடல்சார் கண்காணிப்பு முறையின் வாயிலாக அந்த கப்பலின் வருகை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து சிலாங்கூர் கடல் பகுதியில் ரோந்துப் பணியை மேற்கொண்டிருந்த எம்.எம்.இ.ஏ. படகு அந்த கப்பலை தடுத்து வைத்ததாக சிலாங்கூர் மாநில கடல்சார் அமலாக்க நிறுவனத்தின் இயக்குநர் கேப்டன் அப்துல் முஹைமின் முகமது சாலே கூறினார்.
சிங்கப்பூரிலிருந்து இந்தியா நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த கப்பலில் மாலுமி உள்பட 22 பணியாளர்கள் இருந்தனர். 28 முதல் 63 வயது வரையிலான அவர்கள் அனைவரும் சீனப் பிரஜைகளாவர். அவர்களிடம் செல்லத்தக்க அடையாள ஆவணங்கள் இருந்தன என்று அவர் தெரிவித்தார்.
அந்த கப்பலில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மலேசிய கடலில் நங்கூரமிடுவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை அக்கப்பலின் மாலுமியால் காட்ட இயலவில்லை. இதன் அடிப்படையில் 1952ஆம் ஆண்டு சரக்குக் கப்பல் சட்டத்தின் 491பி(1)(1) பிரிவின் கீழ் அக்கப்பல் குற்றமிழைத்துள்ளதாக நம்பப்படுகிறது என்று அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
மலேசிய கடல் பகுதியில் நங்கூரமிடுவதற்கு முன்னர் மலேசிய கடல்சார் அமலாக்கத் தரப்பினரிடம் உரிய அனுமதியைப் பெறும்படி கப்பலை வழிநடத்துவோர் மற்றும் அதன் உரிமையாளர்களை அப்துல் முமைமின் கேட்டுக் கொண்டார்.


