கோல சிலாங்கூர், ஜன. 1- ஈஜோக்கில் நேற்றிரவு நடைபெற்ற 2025 புத்தாண்டு முதல்நாள் ஒற்றுமை மேம்பால ஓட்டப் பந்தய நிகழ்வில் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆரோக்கிய வாழ்க்கை முறையுடன் தங்களின் புத்தாண்டை வரவேற்றனர்.
இனங்களுக்கிடையே ஒற்றுமை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த நிகழ்வை கோல சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதி அலுவலகம் சிலாங்கூர் பல்கலைக்கழகம், கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகத்துடன் இணைந்து நடத்தியதாக தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜூல்கிப்ளி அகமது கூறினார்.
நல்லிணக்கத்தையும் அண்டை அயலார் நட்புறவையும் வளர்ப்பது முக்கியமானது என்பதால் ஒற்றுமையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
நாம் 2025ஆம் ஆண்டை ஆரோக்கிய வாழ்க்கை முறையுடன் தொடக்கியுள்ளோம். இதன் மூலம் நமது ஆரோக்கியத்திற்கு கூட்டாக முக்கியத்துவம் அளிக்க இயலும். அதே சமயம், தேசிய நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நோய்களிலிருந்தும் விடுபட முடியும் என அவர் சொன்னார்
சுகாதார அமைச்சருமான டாக்டர் ஜூல்கிப்ளி, முன்னதாக இந்த ஓட்டப் பந்தய நிகழ்வை ஈஜோக் நகரில் கொடியசைத்து தொடக்கி வைத்ததோடு இதர பங்கேற்பாளர்களுடன் இணைந்து ஓட்டப் பந்தயத்திலும் கலந்து கொண்டார்.
இந்த ஓட்டப்பந்தய நிகழ்வு இளைஞர்கள், பெரியவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது. இந்த நிகழ்வுக்கு மெருகூட்டும் விதமாக அதிர்ஷ்டக் குலுக்கு மற்றும் வாண வேடிக்கை போன்ற நிகழ்வுகளும் நடத்தப்பட்டன.


