கோத்தா கினாபாலு, ஜன. 1 - இஸ்தானா ஸ்ரீ கினாபாலுவில் இன்று காலை நடைபெற்ற விழாவில் சபாவின் 11வது ஆளுநராக துன் மூசா அமான் பதவியேற்றார்.
பதவி பிரமாணம் எடுப்பதற்காக மூசா தனது மனைவி தோ புவான் ஃபரிடா துசினுடன் காலை 10.11 மணிக்கு விழா மண்டபத்திற்கு வந்தார்.
காலை 10.22 மணிக்கு சபா மற்றும் சரவாக் தலைமை நீதிபதி டான்ஸ்ரீ அப்துல் ரஹ்மான் செப்லியின் முன்னிலையில் யாங் டிபெர்த்துவா நெகிரியாக அவர் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார். பின்னர் அவர் அலுவலக ஆவணங்களில் கையெழுத்திட்டார். அதனைத் தொடர்ந்து சபா முதலமைச்சர் டத்தோஸ்ரீ ஹாஜ்ஜி நூர் வாழ்த்துரை மற்றும் விசுவாச உறுதிமொழியை வழங்கினார்.
காலை 10.43 மணிக்கு ஆளுநர் அங்கிருந்து புறப்பட்டார். இந்நிகழ்வில் துணை முதல்வர்கள் டத்தோஸ்ரீ ஜெஃப்ரி கிடிங்கன், டத்தோ ஜோச்சிம் குன்சலம், டத்தோ ஷால்மி யாஹ்யா, சபா மாநில சட்டசபை சபாநாயகர் டத்தோஸ்ரீ காட்ஜிம் எம் யாஹ்யா, மாநில செயலாளர் டத்தோஸ்ரீ சபார் உண்டோங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி கோலாலம்பூரில் உள்ள இஸ்தானா நெகாராவில் பேரரசர் சுல்தான் இப்ராஹிமிடம் இருந்து யாங் டிபெர்த்துவா நெகிரிக்கான நியமனக் கடிதத்தை மூசா பெற்றார்
அவரது பதவிக்காலம் 2025 ஜனவரி 1 தொடங்கி 2028 டிசம்பர் 31 வரை நீடிக்கும்.


