ஷா ஆலம், ஜன. 1- சிலாங்கூர் அரசின் வருமானம் 2024ஆம் ஆண்டு இறுதியில் 285 கோடி வெள்ளியே 80 லட்சம் வெள்ளியாகப் பதிவாகியுள்ளது. மாநில வரலாற்றில் இதுவே அதிகத் தொகையாகும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
கடந்த 2017ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட 281 கோடியே 10 லட்சம் வெள்ளியை விட இது கூடுதலாகும் என அவர் சொன்னார்.
நேற்று 2024ஆம் ஆண்டு இறுதியில் நாம் ஓய்வெடுக்கத் தயாரான போது 2024ஆம் ஆண்டில் மாநிலத்தின் வருமானம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிகரித்து 285 கோடியே 80 லட்சம் வெள்ளியாகப் (129 விழுக்காடு) பதிவாகியுள்ளது என்றத் தகவல் என்னிடம் தெரிவிக்கப்பட்டது என்று அவர் தனது எக்ஸ் தளப் பதவில் கூறினார்.
கடந்த 2024ஆம் ஆண்டில் நிர்வாகச் செலவினங்களுக்காக 98.07 விழுக்காட்டுத் தொகையையும் மேம்பாட்டிற்கு 97.18 விழுக்காட்டுத் தொகையையும் செலவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த பதிவில் மாநில மக்களுக்கு 2025 புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட அவர், கடந்தாண்டு கிடைத்த ஒவ்வொரு அனுபவமும் வருங்காலத்தில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு பயன்படுத்தப்படும் என்றார்.
சிலாங்கூர் அரசு கடந்த 2023ஆம் ஆண்டு 270 கோடி வெள்ளியையும் 2022ஆம் ஆண்டு 250 கோடி வெள்ளியையும் 2021ஆம் ஆண்டு 230 கோடி வெள்ளியையும் வருமானமாகப் பெற்றது.
நேர்மறையான பொருளாதார வளர்ச்சி மற்றும் மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான முதலீடுகள் நுழைவது ஆகியவை காரணமாக மாநிலம் சிறப்பான அடைவு நிலையைப் பதிவு செய்துள்ளது என்று தாம் நம்புவதாக அமிருடின் முன்னதாகக் கூறியிருந்தார்.


