கோலாலம்பூர், ஜன. 1- இன்று பிறக்கும் 2025ஆம் ஆண்டை நாட்டிலுள்ள பல்வேறு நிலையிலான மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இந்த புத்தாண்டை அவர்கள் சமய மற்றும் பொதுபோக்கு நடவடிக்கைகளுடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
தலைநகரில், புத்தாண்டை வரவேற்பதற்காக நாட்டின் அடையாளச் சின்னமாக விளங்கும் இரட்டைக் கோபுரம் மற்றும் டி.ஆர்.எக்ஸ். எக்ஸ்சேஞ்ச் கட்டிடங்களில் பெரும் திரளான மக்கள் கூடியிருந்தது பெர்னாமா மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்தது.
இது தவிர, நாட்டின் உயரமான இடத்திலிருந்து நடத்தப்பட்ட வாண வேடிக்கையை காண்பதற்காக மெனாரா கோலாலம்பூரில் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் உள்பட திரளான மக்கள் திரண்டிருந்தனர்.
சிலாங்கூரில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக பொது மக்கள் ஷா ஆலம் ஐ-சிட்டியில் உள்ள எம்ஸ்போர்ட்ஸ் பொழுது போக்கு பூங்காவில் ஒன்று கூடினர்.
புத்ரா ஜெயாவிலுள்ள புத்ரா ஜெயா சதுக்கத்தில் நேற்றிரவு திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் நள்ளிரவு 12.00 மணிக்கு நீதித்துறை மாளிகையிலிருந்து படைக்கப்பட்ட வாண வேடிக்கையைக் கண்டு ரசித்தனர்.
பெர்லிஸ் மாநிலத்தில் மாநில அரசின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட 2025 கொண்டாட்டத்திற்கு மந்திரி பெசார் முகமது சுக்ரி ரம்லி தலைமை தாங்கினார். இந்த கொண்டாட்டத்தையொட்டி சமய நிகழ்வுகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கெடா, மாநிலத்தின் சுங்கை பட்டாணியில் உள்ள டத்தாரான் ஜாம் பெசாரில் புத்தாண்டையொட்டி கெடாவுக்கு வருகை தாருங்கள் 2025 இயக்கம் நடத்தப்பட்டது.
பினாங்கு மாநிலத்தின் ஜோர்ஜ் டவுன், பாடாங் கோத்தா லாமாவில் உள்நாட்டினரும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளும் ஒன்று திரண்டு புத்தாண்டை வரவேற்றனர்.


