ஷா ஆலம், டிச 31: செந்தோசா தொகுதியில் உள்ள பல பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் திடீர் வெள்ளப் பிரச்சனையில் அடுத்த ஆண்டு கவனம் செலுத்தப்படும்.
தாமான் செந்தோசா மற்றும் புக்கிட் திங்கி ஆகிய இடங்களில் உள்ள கால்வாய்களை அகலப்படுத்துவது உட்பட சில உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் என்று சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி குணராஜ் தெரிவித்தார்.
"அதுமட்டுமின்றி, தாசேக் பொட்டானிக்கில் உள்ள நீர்ப்பிடிப்பு குளமும் பராமரிக்கப்பட வேண்டும். இதற்கு கிள்ளான் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று அவரை தொடர்பு கொண்டபோது கூறினார்.
குப்பை சேகரிப்பு பணிகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக KDEB கழிவு மேலாண்மை (KDEBWM) உடனான ஒத்துழைப்பை தனது தரப்பு அதிகரிக்கும் என்றும் குணராஜ் கூறினார்.
"குடியிருப்பாளர்களும் தங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும். குப்பைகளை சரியான முறையில் அகற்ற வேண்டும்," என்று அவர் கூறினார்.
2025 ஆம் ஆண்டிற்கான அவரின் எதிர்பார்ப்புகளை குறித்து கேட்டதற்கு, மாநில அரசின் கொள்கைகள் மற்றும் நிகழ்ச்சி நிரலை வெற்றியடையச் செய்ய அனைத்து அரசு ஊழியர்களும் அரசு நிறுவனங்களும் கைகோர்த்து செயல்படுமாறு குணராஜ் கேட்டுக் கொண்டார்.
"சிலாங்கூர் ஒரு சிறந்த தொலைநோக்கு பார்வையைக் கொண்டுள்ளது.ஆனால் அதைவிட முக்கியமானது, அவற்றை செயல்படுத்த ஒன்றாகச் செய்யப்பட வேண்டும்" என்று அவர் கூறினார்.


