சியோல், டிச. 31- தென் கொரியாவில் நிகழ்ந்த ஜெஜூ ஏர் விமான
விபத்தில் பலியானவர்களின் உடல்களை அடையாளம் காண போலீசார்
முயன்று வரும் வேளையில் அந்த விபத்து குறித்து மேலும்
தகவல்களைக் கோரி இறந்தவர்களின் உறவினர்கள் அதிகாரிகளுக்கு
நெருக்குதல் அளித்து வருகின்றனர்.
இன்று வரை அடையாளம் காணப்படாமலிருக்கும் ஐந்து பயணிகளின்
உடல்களை அடையாளம் காண டி.என்.ஏ. எனப்படும் மரபணு சோதனை
உள்ளிட்ட முயற்சிகளை தாங்கள் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக
அந்நாட்டின் தேசிய காவல் துறை கூறியது.
அதே சமயம், இவ்விபத்து நிகழ்ந்த முவான் விமான நிலையத்தில் ஒன்று
கூடிய இறந்த பயணிகளின் உறவினர்கள் இறந்தவர்களின் உடல்களை
விரைந்து அடையாளம் காணவும் விபத்து குறித்த மேல் விபரங்களைப்
பெறவும் அதிகாரிகளை வலியுறுத்தினர்.
மொத்தம் 175 பேர் பயணித்த அந்த ஜெஜூ ஏர் போயிங் 737-800 ரக
விமானம் சக்கரங்கள் செயல்படாத நிலையில் தரையோடு உரசியபடி
தரையிறங்கிய போது கட்டுப்பாட்டை இழந்து விமான நிலையத் தடுப்புச்
சுவரில் மோதி வெடித்து தீப்பிடித்தது. இந்த விபத்தில் இரு விமானப்
பணியாளர்கள் மட்டுமே உயிர்த்தப்பினர்.
இந்த கோர விமான விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய தென் கொரிய
விசாரணையாளர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில்
நாட்டிலுள்ள அனைத்து விமான செயல்பாடுகள் மீது விரிவான பாதுகாப்பு
ஆய்வினை மேற்கொள்ளும்படி தென் கொரியாவின் இடைக்கால அதிபர்
சோய் சாங்-மோக் வலியுறுத்தியுள்ளார்.
விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட கருப்புப் பெட்டியின் முக்கிய
பாகங்கள் காணாமல் போன நிலையில் அதிலுள்ள தரவுகளை மீட்பது
குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
சவுத் கொரியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் பயன்படுத்தும் அனைத்து போயிங்
737 ரக விமானங்களையும் ஆய்வு செய்யும் பணி வரும் ஜனவரி 3ஆம்
தேதி முற்றுப் பெறும் என்றும் அந்த விமான நிலையம் 7ஆம் தேதி வரை
தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்றும் போக்குவரத்து அமைச்சு கூறியது.


