கோலாலம்பூர், டிச 31: இல்லத்தரசிகளுக்கான சமூகப் பாதுகாப்பு திட்டம் எஸ்.கெ.எஸ்.எஸ் ஆரின் கீழ் சந்தாதாரர்களின் பங்களிப்புக்கான நிர்ணைக்கப்பட்ட இலக்கை அடைய மனிதவள அமைச்சுடன் இணைந்து மேற்கொண்ட முயற்சியில் சமூக பாதுகாப்பு அமைப்பு, பெர்கேசோ வெற்றி பெற்றுள்ளது.
2024ஆம் ஆண்டில் 512,518 இல்லத்தரசிகள் எஸ்.கெ.எஸ்.எஸ் ஆர் திட்டத்தின் கீழ் பங்களித்துள்ளதாக பெர்கேசோவின் இல்லதரசிகளுக்கான சமூக பாதுகாப்பு செயற்குழு தலைவர் கஸ்தூரி பட்டு தெரிவித்தார்.
இருப்பினும் இந்த எண்ணிக்கை மொத்த இல்லத்தரசிகளின் எண்ணிக்கையில் 16.5 விழுக்காடு மட்டுமே ஆகும். இன்னும் 26 லட்சம் இல்லத்தரசிகள் பதிவு செய்யவில்லை என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே, கடந்த நவம்பர் மாதம் வரை 39 லட்சம் ரிங்கிட் மதிப்பை உட்படுத்தி 2,019 விண்ணப்பங்களுக்கு பெர்கேசோ ஒப்புதல் அளித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பங்களில் வீட்டுக் கடமைகளை நிர்வகிக்கும் மற்றும் குடும்ப உறுப்பினர்களைப் பராமரிக்கும் போது ஏற்பட்ட விபத்துகள், அத்துடன் மாற்றுதிறனாளி மற்றும் இறப்பு உரிமைகோரல்கள் ஆகியவை அடங்கும் என்று அவர் மேலும் கூறினார்.


