டெல் அவிவ், டிச. 31 - காஸா பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு முக்கிய மருத்துவ நிபுணரை விடுவிக்குமாறு இஸ்ரேலுக்கு உலக சுகாதார அமைப்பின் (டபள்யு.எச்.ஓ.) தலைவர் டெட்ரோஸ் அட்ஹானோம் கிப்ரியேசுஸ் வலியுறுத்தியுள்ளார்.
வட காஸாவில் உள்ள கமால் அத்வான் மருத்துவமனையின் இயக்குனர் ஹூஸாம் அபு சாபியாவை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற அக்கோரிக்கையை அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இஸ்ரேலிய இராணுவத்தின் தாக்குதல், நோயாளிகள் மற்றும் மருத்துவ ஊழியர்களை கட்டாயமாக வெளியேற்றுதல் மற்றும் இயக்குனரின் கைது ஆகியவற்றைத் தொடர்ந்து அந்த மருத்துவமனை தற்போது செயல்படவில்லை என்று அவர் கூறினார்.
காஸாவில் உள்ள மருத்துவமனைகள் மீண்டும் போர்க்களமாக மாறியுள்ளன. மேலும் சுகாதார அமைப்பு முறை கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்று அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


