கோலா திரங்கானு, டிச.31: போலி டெண்டரை வழங்கிய சிண்டிகேட் நிறுவனத்தால் ஏமாற்றப்பட் வர்த்தகர் ஒருவர் 252,150 ரிங்கிட் இழந்தார்.
கடந்த டிசம்பர் 23 அன்று, சந்தேக நபர் ஒருவர் 47 வயதான பாதிக்கப்பட்ட பெண்ணை தொடர்பு கொண்டு, மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகத்தின் கிளை ஒன்றில் பட்டமளிப்பு ஜூபா மற்றும் சீருடையின் வெண்டோராக இருப்பதற்கான வாய்ப்பை வழங்கினார் என கோலா திரங்கானு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அஸ்லி முகமட் நோர் கூறினார்.
அச்சந்தேக நபர், குறிப்பிட்ட ஆடைகளை பெறுவதற்காக விற்பனையாளரின் முந்தைய சப்ளையர் எனக் கூறப்படும் மற்றொரு சிண்டிகேட் உறுப்பினருடன் தொடர்பு கொள்ளுமாறு பாதிக்கப்பட்ட பெண்ணை கேட்டு கொண்டதாக அவர் கூறினார்
"கொடுக்கப்பட்ட விலையை பார்த்த பிறகு டெண்டரை ஏற்றுக்கொள்வதற்கு அப்பெண் ஒப்புக்கொண்டார். மேலும் RM252,150 ஐப் பயன்படுத்தி பொருட்களை வாங்குவதற்காக ஐந்து வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு ஐந்து கட்டண பரிவர்த்தனைகளை செய்தார்," என்று அஸ்லி முகமட் அறிக்கை மூலம் தெரிவித்தார்.
பின்னர் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் சரிபார்த்த பின்னரே அப்பெண் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததார் என அஸ்லி கூறினார்.
– பெர்னாமா


