சியோல், டிச. 31 - தென் கொரியாவின் தென்மேற்கிலுள்ள விமான நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த கோர விமான விபத்தில் உயிரிழந்த 179 பயணிகளில் 174 பேரின் உடல்கள் தற்காலிகமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சு இன்று தெரிவித்தது.
கைரேகை மூலம் அடையாளம் காண முடியாத 32 பயணிகளில் 17 பேர் முதல் டி.என்.ஏ. எனப்படும் மரபணு சோதனையில் அடையாளம் காணப்பட்ட வேளையில் இரண்டாவது டி.என்.ஏ. பரிசோதனையில் மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டதாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக நடத்தப்பட்ட விளக்கமளிப்பு நிகழ்வில் நிலம், உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து அமைச்சு கூறியது.
டி.என்.ஏ. முரண்பாடுகள் காரணமாக மீதமுள்ள ஐந்து பேரை அடையாளம் காண முடியவில்லை. அடையாளம் காணப்பட்ட நான்கு பேரின் உடல்கள் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதிச் சடங்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்தது.
பெரும்பாலான உடல்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் அவற்றை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க 10 நாட்கள் வரை ஆகலாம் என்று அதிகாரிகள் முன்பு தெரிவித்திருந்தனர்.
சியோலில் இருந்து தென்மேற்கே 290 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முவான் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஜெஜு ஏர் நிறுவனத்தின் போயிங் 737-800 விமானம் விபத்துக்குள்ளானது.
தரையிறங்கும் கியர் செயலிழந்ததால் சக்கரங்கள் இல்லாமல் தரையிறங்கிய அந்த விமானம், ஓடுபாதையில் இருந்து சறுக்கி விமான நிலைய சுவரில் மோதி தீப்பற்றியது.


