ஷா ஆலம், டிச. 31- சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு
நிறுவனத்திற்கு 19,765.20 வெள்ளி சந்தா பாக்கியைச் செலுத்தத் தவறிய
குற்றத்திற்காக கேட்டரிங் எனப்படும் உணவு விநியோக நிறுவனம்
ஒன்றின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
பிறப்பித்தது.
சொக்சோ சந்தாவைச் செலுத்தத் தவறிய காரணத்திற்காக சொத்துக்கள்
பறிமுதல் செய்யப்படும் மலேசியாவின் முதல் நிறுவனமாக இந்நிறுவனம்
விளங்குகிறது.
நிலுவைத் தொகையைச் செலுத்தத் தவறியதற்காக ஷா ஆலம்
மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விதித்த 4,000 வெள்ளி அபராதத் தொகையைச்
செலுத்தாத காரணத்தால் சொக்சோ சமர்ப்பித்த மனு மீது நீதிமன்றம்
வழங்கிய உத்தரவின் அடிப்படையில் இந்த சொத்து பறிமுதல்
நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சிலாங்கூர் மாநில சொக்சோ
இயக்குநர் இஸ்மாயில் அபி ஹஷிம் கூறினார்.
நிலுவையில் உள்ள 19,765.20 வெள்ளித் தொகையை 2023ஆம் ஆண்டு
மார்ச் மாதம் தொடங்கி ஆறு தவணைகளில் அந்நிறுவனம் செலுத்த
வேண்டும் என்றும் தவறினால் சொத்துப் பறிமுதல் ஆணை
பிறப்பிக்கப்படும் என்றும் நீதிமன்றம் முன்னதாக தனது தீர்ப்பில்
கூறியிருந்தது.
எனினும், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் நிலுவைத் தொகையை
அந்நிறுவனம் செலுத்தத் தவறி விட்டது. எனவே, அந்நிறுவனத்தின்
சொத்துக்களை பறிமுதல் செய்ய சிலாங்கூர் சொக்சோ நீதிமன்ற
உத்தரவைப் பெற்றது. இன்று மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில்
அந்நிறுவனத்திற்குச் சொந்தமான சுமார் 20,000 வெள்ளி மதிப்புள்ள
பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக இஸ்மாயில் தெரிவித்தார்.
சொக்சோவுக்கு செலுத்த வேண்டிய பாக்கி சந்தா தொகையைச் செலுத்த
அந்நிறுவனத்திற்கு எழு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு
செய்யத் தவறினால் வரும் ஜனவரி 13ஆம் தேதி அப்பொருள்கள்
ஏலமிடப்படும் என்றார் அவர்.


