கோபேங், டிச 31 - நாடு முழுவதும் உள்ள மழலையர் பள்ளிகள் (தபிகா) மற்றும் குழந்தை பராமரிப்பு மையங்களை (தஸ்கா) மேம்படுத்துதல் மற்றும் பழுதுபார்ப்புகளை மேற்கொள்வதற்காக சமூக மேம்பாட்டுத் துறைக்கு (KEMAS) கிராமப்புற மற்றும் பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் RM40 மில்லியனை ஒதுக்கீடு செய்துள்ளது.
10,600 மழலையர் பள்ளிகள் மற்றும் குழந்தை பராமரிப்பு மையங்களின் (60 சதவீதம்) சேதமடைந்துள்ள நிலைமையை நிவர்த்தி செய்வதற்காக உடனடி பராமரிப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று KEMAS இயக்குநர் ஜெனரல் டத்தோ முகமட் ஹனவியா மான் கூறினார்.
"இந்த மழலையர் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்த பழைய கட்டிடங்களின் மேம்பாட்டு பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்," என்று அவர் விளக்கினார்.
"இங்கு வசதிகள் பாதுகாப்பாக இருப்பதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம். இதன் மூலம், குழந்தைகள் கவலையின்றி தங்கள் கல்வியை தொடர முடியும்.
அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்காக கம்பார் மற்றும் தம்புனில் இரண்டு மழலையர் பள்ளிகள் உட்பட 17 புதிய மழலையர் பள்ளிகள் அடுத்த ஆண்டு கட்டப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
"பெற்றோர்களின் ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது,20,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் KEMAS மழலையர் பள்ளிகளில் சேர்வதற்காகக் காத்திருப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்,” என்று அவர் கூறினார்.
- பெர்னாமா


