கோலாலம்பூர், டிச. 31- புக்கிட் பிந்தாங் வட்டாரத்தில் சட்டவிரோதமாக
செயல்பட்டு வரும் கார் நிறுத்துமிடக் கட்டண வசூலிப்பு கும்பலுக்கு
எதிராக குடிநுழைவுத் துறை நேற்று பிற்பகலில் அதிரடிச் சோதனை
நடத்தியது. இச்சோதனையில் 17 அந்நிய நாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
நேற்று பிற்பகல் 1.00 மணிக்கு மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையில்
சிறப்பு நடவடிக்கைப் பிரிவைச் சேர்ந்த ஆறு அதிகாரிகளும்
உறுப்பினர்களும் பங்கு கொண்டதாக கோலாலம்பூர் குடிநுழைவுத்
துறையின் இயக்குநர் வான் முகமது சவுபி வான் யூசுப் கூறினார்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு நீடித்த இந்த நடவடிக்கையில் புக்கிட் பிந்தாங்கின் இரு இடங்களில் சட்டவிரோதமான முறையில் கார் நிறுத்துமிடக் கட்டணங்களை வசூலித்ததாக சந்தேகிக்கப்படும் முப்பது வயது மதிக்கத்தக்க 17 அந்நிய நாட்டினர் கைது செய்யப்பட்டனர் என்று அவர் தெரிவித்தார்.
முதலாவது சோதனை நடவடிக்கையில் இரு வங்காள தேசிகளும் ஒன்பது
மியன்மார் நாட்டினரும் கைது செய்யப்பட்ட வேளையில் இரண்டாவது
நடவடிக்கையில் ஆறு மியன்மார் பிரஜைகள் பிடிபட்டனர் என்றார் அவர்.
அந்நிய நாட்டினர் சட்டவிரோதமான முறையில் கார் நிறுத்துமிடக்
கட்டணங்களை வசூலிப்பதைச் சித்தரிக்கும் காணொளி ஒன்று பேஸ்புக்
மூலம் வைரலானது காவல் துறையின் கவனத்திற்கு வந்த பிறகு இந்த அதிரடிச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து தகவலறிந்தவர்கள் அது
குறித்து உடனடியாக குடிநுழைவுத் துறைக்கு தகவல் அளிக்கும்படி அவர்
கேட்டுக் கொண்டார்.


