ஷா ஆலம், டிச 31: நேற்று சிலாங்கூரில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் ஒரு மாத சிறப்பு நிதி உதவியின் (BKK) முதல் கட்டக் கொடுப்பனவை பெற்றனர்.
கடந்த நவம்பரில், அனைத்து அரசு ஊழியர்களும் இரண்டு மாத சிறப்பு நிதி உதவி பெறுவார்கள் என டத்தோ மந்திரி புசார் பட்ஜெட் 2025 தாக்கல் செய்யும் போது அறிவித்தார். அது கட்டங் கட்டமாக வழங்கப்படும் என்றார்.
இந்த ஒரு மாத சிறப்பு நிதி உதவியை வழங்கியதை, அரசு ஊழியர்கள் மாநில அரசுக்கு அளித்த அர்ப்பணிப்புக்கான பாராட்டு என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது முகநூலில் விவரித்தார்.
"இன்று, சிலாங்கூர் அரசு ஊழியர்களின் அசாதாரண அர்ப்பணிப்பை நாங்கள் கொண்டாடுகிறோம். அவர்கள் சிலாங்கூர் மாநிலம் தொடர்ந்து வெற்றிபெறவும் சிறந்து விளங்கவும் முதுகெலும்பாக உள்ளனர்.
"மாநில வருவாய் இலக்கை தாண்டி நான்கு ஆண்டுகள் தொடர்ந்து வெற்றியை அடைந்துள்ளோம். இது சிலாங்கூர் அரசு ஊழியர்களின் தீவிரத்தன்மை மற்றும் அர்ப்பணிப்பை காட்டுகிறது.
முதற்கட்ட சிறப்பு நிதி உதவி டிசம்பர் 30 மற்றும் அடுத்தது 25 மார்ச் 2025 அன்று ஐடில்பித்ரி கொண்டாட்டத்தை முன்னிட்டு வழங்கப்படும் என்று அவர் விளக்கினார்.


