ஜோர்ச்டவுன், டிச 30: பினாங்கில், குறிப்பாகப் பண்டிகை காலம் மற்றும் பெரிய அளவிலான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்போது அந்நிய மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தேவைப்படும் தங்கும் விடுதிகளின் எண்ணிக்கையில் பற்றாக்குறை நிலவுகிறது.
தற்போது பினாங்கு மாநிலத்தில் சுமார் 12,000 தங்கும் விடுதிகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.
இருப்பினும், சுற்றுலாப் பயணிகளுக்கு போதுமான தங்கும் வசதியை ஏற்படுத்த இன்னும் அதிக அளவில் குறிப்பாக செபெராங் பிறை பகுதியில் தங்கும் விடுதிகள் தேவைப்படுவதாகப் பினாங்கு மாநில முதலமைச்சர் செள குன் இயோவ் தெரிவித்தார்.
இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரையில் பினாங்கு அனைத்துலக விமான நிலையம் வழியாக சுமார் 61 லட்சத்து 80 ஆயிரம் உள்நாட்டு மற்றும் அந்நிய சுற்றுலாப் பயணிகள் பினாங்கிற்கு வருகை புரிந்தனர்.
இது கடந்தாண்டை காட்டிலும் 7.46 விழுக்காடு உயர்ந்துள்ளதாக அவர் விளக்கினார்.


