கோலாலம்பூர், டிச. 30 - இவ்வாண்டில் தாம் மேற்கொண்ட அதிகாரப்பூர்வ வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் உலகத் தலைவர்களின் மலேசியா வருகை அரசதந்திர உறவுகளை கணிசமாக வலுப்படுத்தி முதலீடுகளை அதிகரிக்கச் செய்ததோடு நாட்டின் உலகளாவிய நிலையையும் மேம்படுத்தியுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
மலேசியா ஒரு மரியாதைக்குரிய விவேகப் பங்காளியாகக் கருதப்படுகிறது. உலகப் பிரச்சனைகளுக்குப் போராடுவதில், குறிப்பாக பாலஸ்தீனர்களின் நீதி முயற்சியை ஆதரிப்பதிலும், நியாயமான மற்றும் சமநிலையான உலக ஒழுங்கிற்கு பங்காற்றுவதிலும் ஆற்றிவரும் தீவிர ஈடுபாட்டிற்காக செல்வாக்குமிக்கத் தலைவர்களின் அங்கீகாரத்தை அது பெற்றுள்ளது.
2025 ஆம் ஆண்டில் மலேசியா ஆசியானை ஒரு புதிய சகாப்தத்திற்கு அழைத்துச் செல்ல தயாராக உள்ளது. அது மிகவும் விரிவானது மற்றும் நிலையானது என்று அன்வார் கூறினார்.
அனைத்துலக சமூகத்தின் வலுவான ஆதரவுடன் பகிரப்பட்ட செழிப்பை இயக்கும் முழு நம்பிக்கையுடன் புத்தாண்டில் நுழைகிறோம் என்று அவர் இன்று தனது முகநூல் பதிவில் கூறினார்.
அந்தப் பதிவில் பகிரப்பட்ட காணொளியில் சிங்கப்பூர், புருணை, இந்தோனேசியா, சீனா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, ஜெர்மனி, கத்தார், சவுதி அரேபியா, உஸ்பெகிஸ்தான், ஜப்பான், இந்தியா, பெரு மற்றும் பிரேசில் உள்பட 2024ஆம் ஆண்டில் தாம் மேற்கொண்ட அதிகாரப்பூர்வ வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பான காட்சிகளைப் அன்வார் பகிர்ந்து கொண்டார்.
இந்த பயணங்களின் வழி ஜெர்மனி (வெ.46 பில்லியன்), தென் கொரியா (வெ.32.8 பில்லியன்), ஆஸ்திரேலியா (வெ.24.5 பில்லியன்), ஜப்பான் (வெ.1.45 பில்லியன்) மற்றும் இந்தியா (வெ.4.8 பில்லியன்) ஆகிய நாடுகளின் முக்கிய முதலீடுகளுடன் சேர்த்து 115.2 பில்லியன் வெள்ளி சாத்தியமான முதலீட்டை நாடு பதிவு செய்துள்ளது.
அதே சமயம், கம்போடியா, அர்ஜென்டினா, சீனா, கிர்கிஸ்தான், எகிப்து மற்றும் பஹ்ரின் உட்பட வெளிநாட்டு பிரமுகர்களின் 35 அதிகாரப்பூர்வ மற்றும் மரியாதை நிமித்த வருகைகளை மலேசியா பெற்றுள்ளது.


