கோலாலம்பூர், டிச. 30 - கிளந்தான் மற்றும் திரங்கானுவில் வெள்ள
நிலைமை இன்று காலை மோசமடைந்துள்ள நிலையில் தற்காலிக
நிவாரண மையங்களில் அடைக்கலம் நாடியவர்கள் எண்ணிக்கையும்
உயர்வு கண்டுள்ளது.
கிளந்தான் மாநிலத்தில் நேற்றிரவு 482 பேராக இருந்த தற்காலிக நிவாரண
மையங்களில் தங்கியிருந்தவர்கள் எண்ணிக்கை இன்று காலை 882 பேராக
உயர்வு கண்டுள்ளது. 267 குடும்பங்களைச் சேர்ந்த அவர்கள் அனைவரும் 19
நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
வெள்ளத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக தானா மேரா
விளங்குவதாக சமூக நலத் துறையின் பேரிடர் தகவல் அகப்பக்கம்
கூறியது. அம்மாவட்டத்தில் 208 குடும்பங்களை சேர்ந்த 633 பேர் 13
நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
கோல கிராய் மாவட்டத்தில் 38 குடும்பங்களைச் சேர்ந்த 165 பேரும்
மாச்சாங்கில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 84 பேரும் தற்காலிக துயர்
துடைப்பு மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர்.
திரங்கானு மாநிலத்தில் இன்று காலை நிலவரப்படி 177 குடும்பங்களைச்
சேர்ந்த 651 பேர் தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
நேற்றிரவு இம்மாநிலத்தில் 37 குடும்பங்களைச் சேர்த்ந 112 பேர் மட்டுமே
துயர் துடைப்பு மையங்களில் தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலு திரங்கானு மாவட்டத்தில் மிக அதிகமாக 111 குடும்பங்களைச் சேர்ந்த
412 பேரும் பெசுட் மாவட்டத்தில் 61 குடும்பங்களைச் சேர்ந்த 228 பேரும்
கெமமான் மாவட்டத்தில் ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 11 பேரும்
தற்காலிக மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் 17 வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
இம்மாநிலத்தின் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நிவாரண மையங்களில் தங்கியுள்ளவர்கள் எண்ணிக்கை மேலும் உயர்வு காணும் என அஞ்சப்படுகிறது.


