பட்டர்வொர்த், டிச 30: பட்டர்வொர்த் நிலையத்திலிருந்து தாய்லாந்து, ஹாட்ஜாய்க்கும், அங்கிருந்து மறுபடியும் பட்டர்வொர்த்திற்கு திரும்பும் MySawasdee சிறப்பு இரயில் சேவை நேற்று தொடங்கப்பட்டது.
இச்சேவைக்கு முதல் நாளே நல்ல வரவேற்பு கிடைத்தது. டிக்கெட்டுகள் எழுபது விழுக்காடு விற்று தீர்ந்துள்ளதாக Kereta api Tanah Melayu நிறுவனம் KTMB-இன் அனைத்துலக விவகாரங்களுக்கான சிறப்பு பணி தலைவர் ரோஷிடி யாஹ்யா தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனவரி 5 ஆம் திகதி வரை சோதனைப் பயணத்தில் செயல்படும் இச்சேவையின் ஒவ்வொரு பயணத்திற்கும் 360 இருக்கைகள் ஏற்பாடு செய்யப்படும் என அவர் கூறினார்.
நேற்று பட்டர்வொர்த் நிலையத்தில் முதலாவது சிறப்பு இரயில் புறப்பட்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
புக்கிட் மெர்தாஜாம், சுங்கை பட்டாணி, அலோர் ஸ்டார், பாடாங் பெசார் உள்ளிட்ட பல முதன்மை இரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் ஒரு வழிப் பயணத்திற்கு 45 ரிங்கிட் கட்டணத்தில்,நாள்தோறும் இந்த சிறப்பு இரயிலின் சேவை வழங்கப்படும் என்று ரோஷிடி தெரிவித்தார்.
-பெர்னாமா


