கெய்ரோ/ஜெருசலம், டிச. 30 - வட காஸா மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று அதிரடிச் சோதனை நடத்திய
இஸ்ரேலியப் படையினர், அம்மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் மருத்துவ ஊழியர்கள் உட்பட 240க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களைக் கைது செய்தனர்.
கமால் அத்வான் மருத்துவமனையின் இயக்குனரான ஹூசாம் அபு சபியா இஸ்ரேலிய இராணுவத்தால் தாக்கப்பட்டதாக விடுவிக்கப்பட்ட சில ஊழியர்கள் கூறியுள்ள நிலையில் அவரின் நிலை குறித்து தாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சு கூறியது.
ஹமாஸ் இராணுவ நடவடிக்கைகளுக்கான கட்டளை மையமாக இந்த மருத்துவமனை பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படுவதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்தது.
அபு சபியா ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று சந்தேகிக்கப்படுவதால் அவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் எனவும் அது கூறியது.
எனினும், காஸா போர் நிகழ்ந்து வரும் இந்த 15 மாத காலத்தில் அந்த மருத்துவமனையிலிருந்து தமது போராளிகள் செயல்பட்டனர் என்ற இஸ்ரேலின் கூற்றை ஹமாஸ் நிராகரித்தது.
அதேசமயம், போராளிகள் யாரும் மருத்துவமனையில் இல்லை என்றும் அது தெரிவித்தது. எனினும், 240 பேரின் கைது குறித்து ஹமாஸ் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை .
வடக்கு காஸாவில் எஞ்சியுள்ள மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ வசதிகளைப் பாதுகாக்க அவசரமாகத் தலையிடுமாறு ஐக்கிய நாடுகள் சபையையும் தொடர்புடைய சர்வதேச நிறுவனங்களையும் சனிக்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில் ஹமாஸ் வலியுறுத்தியது .
இராணுவ நோக்கங்களுக்காக மருத்துவமனைகளைத் தாங்கள் பயன்படுத்துவதாக கூறப்படும் இஸ்ரேலின் குற்றச்சாட்டை மறுப்பதற்காக காஸாவில் உள்ள மருத்துவ வசதிகளைப் பார்வையிட ஐ.நா பார்வையாளர்களை அனுப்பவும் ஹமாஸ் அழைப்பு விடுத்தது .


