கோத்தா பாரு, டிச. 30- கிளந்தான் மாநிலத்தில் நேற்று தொடங்கி
மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் இதன் காரணமாக இரு
இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதோடு மாச்சாங் மாவட்டத்தில் இரு
பிரதான சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த பாதிப்புகள் பொதுமக்களின் போக்குவரத்தை முடக்கியுள்ளதோடு
சம்பந்தப்பட்ட பகுதிகளில் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை
ஏற்படுத்தியுள்ளது.
கிளந்தான் மாநிலத்தில் ஜாலான் புக்கிட் கெமுனிங்- புக்கிட் பிலா மற்றும்
ஜாலான் பத்து 30-தெமாங்கான் சாலைகள் வெள்ளத்தில்
பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில பொதுப்பணித் துறை இயக்குநர் நிக் சோ
யாக்கோப் கூறினார்.
அந்த சாலைகள் அனைத்தும் 0.8 மீட்டர் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால்
கனரக வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் பயன்படுத்த
முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
மேலும், வி.எச்.எஃப். புக்கிட் பாக்கார் செல்லும் வழி மற்றும் கோத்தா பாரு-
குவா மூசாங் சாலையில் நிலச்சரிவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக
அவர் குறிப்பிட்டார்.
வாகனமோட்டிகள் விதிமுறைகளை முறையாகக் கடைபிடிப்பதை உறுதி
செய்வதற்கும் விரும்பத்தகாத சம்பவங்களைத் தடுப்பதற்கும் ஏதுவாக
சம்பந்தப்பட்ட பகுதிகளில் அறிவிப்பு பலகைகளை பொதுப்பணி இலாகா
நிறுவியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
மாற்று வழிகளைப் பயன்படுத்தும்படி வாகனமோட்டிகள் கேட்டுக்
கொள்ளப் படுவதோடு மூடப்பட்ட சாலைகள் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்ட
இடங்கள் தொடர்பான தகவல்களை பொதுப்பணித் துறையின் அகப்பக்கம்
வாயிலாக அறிந்து கொள்ளும்படியும் அறிவுறுத்தப்படுகின்றனர்.


