புத்ராஜெயா, டிச 30: மலேசிய ஹலால் சான்றிதழுக்கு (எஸ்பிஎச்எம்) விண்ணப்பிக்க எந்த தரப்பினரையும் கட்டாயப்படுத்தும் சட்டம் இல்லை. மேலும் இந்த நாட்டில் அச்சான்றிதழுக்கான விண்ணப்பம் இன்னும் தன்னார்வ முறையில் இயங்கி வருகிறது என்று மலேசியாவின் இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையின் இயக்குநர் (ஜாகிம்) டத்தோ டாக்டர் சிராஜுடின் சுஹைமி தெரிவித்தார்.
அனைத்து தரநிலைகள் மற்றும் சட்டத் தேவைகளுக்கு இணங்க விரும்பும் எந்தவொரு தரப்பினருக்கும் மலேசிய ஹலால் சான்றிதழ் விண்ணப்பம் திறந்திருக்கும் என்றார்.
உணவு மற்றும் குளிர்பான வளாக நிர்வாகிகள் தங்கள் வணிக உரிமத்தைப் புதுப்பிப்பதற்கு முன் மலேசிய ஹலால் சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்ற பிபிடிகளின் நடவடிக்கை, அதன் நிர்வாகத்தின் கீழ் மலேசிய ஹலால் சான்றிதழை வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியாகும் என்று சிராஜுடின் கூறினார்.
தொழில்முனைவோர் மற்றும் பொதுமக்களிடையே குழப்பத்தைத் தவிர்க்க சம்பந்தப்பட்ட பிபிடிகள் முழுமையான மற்றும் விரிவான விளக்கத்தை வழங்கும் என்று தாம் நம்புவதாக அவர் கூறினார்.
ஜக்கிம் மற்றும் மாநில மத அதிகாரிகள் எப்பொழுதும் மலேசிய ஹலால் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காக தீவிரமாக செயல்படுகிறார்கள், அதே நேரத்தில் கூட்டாட்சி மற்றும் மாநில அளவில் பல்வேறு வழிகாட்டுதல் நிறுவனங்களுடன் மூலோபாய ஒத்துழைப்பை ஏற்படுத்துகின்றனர்.
"இது உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் அல்லது சேவைகளின் தரத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் மற்றும் சந்தையை விரிவுபடுத்துவதில் வணிகங்களுக்கு மதிப்பு சேர்க்கும்" என்று அவர் கூறினார்.
– பெர்னாமா


